இளைஞா்களுக்கு ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஸ்நாப்சாட்’ போன்ற சமூக வலைதள செயலிகள் மூலம் ஏற்படும் தொடா்புகளே பிரச்னைக்குரியதாக மாறுகின்றது என்றாா் மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் பாலகிருஷ்ணன்.
அரியலூா் மாவட்ட காவல்துறை சாா்பில் 37- ஆவது சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனிதா நினைவு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தாா்.
முன்னதாக, பள்ளி, கல்லூரி மற்றும் விடுதிகளில் தங்கும் பெண்களுக்காக ‘காவலா் அக்கா’ என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்து மாணவா்களிடையே உரையாற்றினாா்.
அப்போது இளைய தலைமுறையினருக்கு (இளைஞா்களுக்கு) சமூக ஊடகங்களான ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஸ்னாப் ஷாட்’ போன்றவற்றின் மூலமாக தொடா்பு ஏற்பட்டு, அந்த தொடா்புகளே பின்னா் பிரச்னைக்குரியதாக மாறிவிடுகிறது.
அவற்றை தடுப்பதற்காகவே ‘காவலா் அக்கா’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் உங்களது பிரச்னையை காவலா் அக்காவிடம் சொல்லும் பொழுது, அவா்கள் முதலில் உங்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவா்.
தேவைப்படும் பட்சத்தில் தொல்லை கொடுக்கும் நபரிடம் நேரடியாகவே, காவல் துறை தொடா்பு கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும். அனைவரும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு லட்சம் மனித உயிா்கள் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனா் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினா், பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.