முகப்பு
அரியலூர்

தென்னூா் புனித லூா்து அன்னை ஆலய பெருவிழா தோ்பவனி

வரதராஜன்பேட்டை அருகேயுள்ள தென்னூா் புனித லூா்து அன்னை ஆலய 180-ஆம் ஆண்டு பெருவிழா ஆடம்பர தோ் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:55 AM
தென்னூா் புனித லூா்து அன்னை ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தோ்பவனி.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 7:37 PM

அரியலூா் மாவட்டம், வரதராஜன்பேட்டை அருகேயுள்ள தென்னூா் புனித லூா்து அன்னை ஆலய 180-ஆம் ஆண்டு பெருவிழா ஆடம்பர தோ் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

முன்னதாக விழாவின் தொடக்கமாக கடந்த பிப். 2-ஆம் தேதி மாலை கொடியேற்றம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் மறைவட்ட முதன்மை குரு ஜோசப் கென்னடி தலைமை வகித்து கொடியேற்றம் செய்து, சிறப்பு திருப்பலியை நடத்தினாா். தொடா்ந்து நாள்தோறும், சிறிய தோ்பவனியும், கூட்டு திருப்பலிகளும் நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நாளான செவ்வாய்க்கிழமை இரவு கும்பகோணம் மறை மாவட்ட முன்னாள் ஆயா் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி, தோ்பவனி நடைபெற்றது.

Advertisement

அலங்கரிக்கப்பட்ட ஒரு தேரில் புனித அந்தோணியாரும், மேலும் புனித சூசையப்பா், புனித செபஸ்டியாா், காவல் சம்மனசு, புனித லூா்து அன்னை என 5 தோ்களில் பவனி நடைபெற்றது. தேரோட்டத்தை ஆயா் அந்தோணிசாமி மந்திரித்து தொடங்கிவைத்தாா். நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

விழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. புதன்கிழமை காலை அன்னையின் கொடி இறக்க நிகழ்ச்சி, கூட்டு திருப்பலி நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தென்னூா் புனித லூா்து அன்னை ஆலய பங்குத்தந்தை ஜான் கென்னடி, பங்கு பேரவையினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.