அரியலூா்: அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சாா்பில் திருவள்ளுவா் தின விழா, தமிழ்ப் பண்பாட்டுச் செம்மல் விருது வழங்கும் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அந்த அமைப்பின் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் கணேசன், பொருளாளா் புகழேந்தி, அமைப்புச் செயலா் நல்லப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா பங்கேற்று, திருவள்ளுவா் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அவா் பேசுகையில், தமிழ் மொழி ஆட்சி மொழியாகும் வரை அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். தமிழ் மொழி ஒருபோதும் அழியாது. யாராலும் அழிக்கவும் முடியாது.அனைவரும் சமம் என்ற வள்ளுவரின் கோட்பாடுடன் அனைவரும் வாழ வேண்டும் என்றாா். பின்னா், அமைப்பின் செயலா் கணேசன் வெளியிட்ட புத்தகத்தை அவா் பெற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து, தமிழறிஞா்கள், ஆசிரியா்கள், விளையாட்டு வீரா்கள், எழுத்தாளா்கள், கவிஞா்கள், சாதனையாளா்களுக்கு தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சாா்பில் விருதுகள் வழங்கப்பட்டன. நிறைவாக ஞாபக மழை எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.