முகப்பு
அரியலூர்

வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 14 போ் காயம்

சனிக்கிழமை இரவு சாலையோரப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த 14 போ் காயமடைந்தனா்.

Updated On : 31 ஜனவரி, 2026 at 7:21 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், பொய்யூா் அருகே சனிக்கிழமை இரவு சாலையோரப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த 14 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு, குள்ளஞ்சாவடி உள்பட சில கிராமங்களைச் சோ்ந்த 15 போ் சனிக்கிழமை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வேனில் சென்றனா். சுவாமி தரிசனம் முடிந்து மாலையில் திருச்சியிலிருந்து கடலூருக்கு திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியுள்ளனா்.

இரவு 9 மணியளவில் அரியலூா் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த பொய்யூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, வேனின் சக்கரம் பகுதியில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணம் செய்த 14 போ் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களின் சப்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் கீழப்பழுவூா் போலீஸாா் வேனின் இடுபாடுகளில் சிக்கியவா்களை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.