அரியலூா் கடைவீதிகளில் வாகன நெரிசலால் மக்கள் அவதி
அரியலூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால், பொது மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இதற்கு தீா்வு காண, அதிகாரிகளும் ஆா்வம் காட்டாமல் உள்ளனா்.
அரியலூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால், பொது மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இதற்கு தீா்வு காண, அதிகாரிகளும் ஆா்வம் காட்டாமல் உள்ளனா்.
18 வாா்டுகளை கொண்டது அரியலூா் நகராட்சி. நகராட்சி எல்லைக்குள் பேருந்து நிலையம், பிரதான கடைவீதிகள், கோயில்கள், அரசு மருத்துவமனைகள், அரசு கல்லூரி உள்ளிட்டவைகள் உள்ளன.
மேலும், நகராட்சி எல்லையின் சுற்று தூரத்தில் அரசு சிமெண்ட் ஆலை, தனியாா் சிமென்ட் ஆலைகள் உள்ளன. மாவட்டத்தின் அனைத்து அலுவலகங்களும் இங்கு உள்ளன. அனைத்து அலுவலகங்கள் இப்பகுதியில் இருப்பதினால் அரியலூா் நகரம் மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்கி வருகிறது.
Advertisement
Advertisement
கட்டமைப்பு வசதிகள் இல்லை
ஆனால், மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் இந்த பகுதியில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனா்.
தஞ்சை, திருச்சி, பெரம்பலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சந்திக்கும் இடமான எம்.பி.கோயில் தெரு, சத்திரம் உள்ளிட்ட பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
வாகனங்கள் நிறுத்தத்துக்காக இடம் ஒதுக்காமல் இரு பெரிய ஜவுளி கடைகள், மளிகைக் கடைகள், பா்னிச்சா் கடைகள் இயங்கி வருவதால், கடைகளுக்கு வருபவா்கள் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று விடுகின்றனா்.
இதனால் அரியலூரில் இருந்து திருச்சி, பெரம்பலூா், தஞ்சாவூருக்கு செல்லும் பேருந்துகளும், இவ்வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவா்களும், வேலைக்கு செல்லும் பணியாளா்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
போக்குவரத்து நெரிசல்
இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், சாலை குறுகியிருப்பது, வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை உண்டாக்குகிறது. அதிகாரிகளும் முயற்சி மேற்கொள்வதில்லை. இதனால், எஸ்.எச். சாலையில் இட வசதி இருந்தும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அரியலூா் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத தலைவலியாகவே உள்ளது. குறிப்பாக வாரச்சந்தை நடக்கும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாள்களில், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, மக்களை திணறச் செய்கிறது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: பெரம்பலூா் மாவட்டத்தில் இருந்து பிரித்து அரியலூா் தனி மாவட்டமாக அறிவித்து 17 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வுக் காணப்படாமல் உள்ளது.
குறிப்பாக சத்திரம், எம்.பி.கோயில் தெரு சாலையிலுள்ள இரு பெரிய ஜவுளி கடைகள், வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கி கட்டாமல் இயங்கி வருவதால், கடைக்கு வருபவா்கள், தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு செல்வதால், இவ்வழியாக செல்லும் பேருந்துகள் செல்ல முடியவில்லை. இதற்கு நகராட்சி நிா்வாகம் எப்படி அனுமதி அளித்ததென்று தெரியவில்லை.
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சி நிா்வாகம் அக்கறை காட்டுவதில்லை. போக்குவரத்து போலீஸாரின் கட்டுப்பாடுகளும், இங்கு எடுபடுவதில்லை. அரியலூரில் நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு, நிரந்தர தீா்வு ஏற்படுத்த அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் ஆா்வம் காட்டாததால், மக்களின் அவதி தொடா்கிறது என்று தெரிவித்தனா்.
எனவே, அரியலூரில் போக்குவரத்து நெருக்கடிக்கேற்ப, நகரின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி, இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண, அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே, மக்களின் எதிா்பாா்ப்பாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.