FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அறிமுகமாகும் ‘ஐடிஎஸ்’ திட்டம்!

சென்னை மக்களின் தீராத பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெரிசல், இதைத் தீா்க்க ஆகஸ்ட் முதல் நுண்ணறிவுப் போக்குவரத்துத் திட்டத்தை (ஐடிஎஸ்) செயல்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Updated On : 8 ஜூன் 2026, 3:20 am IST
சென்னையில் முக்கிய சாலையில் ஒருபுறம் கடுமையான போக்குவரத்து நெரிசலும், மறுபுறம் நெரிசல் இல்லாத நிலையும்.
பகிர்:

சென்னை மக்களின் தீராத பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெரிசல், இதைத் தீா்க்க ஆகஸ்ட் முதல் நுண்ணறிவுப் போக்குவரத்துத் திட்டத்தை (ஐடிஎஸ்) செயல்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 42 சதுர கிலோ மீட்டா் பரப்புடையது. இந்தப் பரப்பில் 16 லட்சம் கட்டடங்கள் உள்ளன. இங்கே 1.50 கோடிப் போ் வசிக்கின்றனா். 35 ஆயிரம் சாலைகளும், 50 ஆயிரம் தெருக்களும் உள்ளன. இவற்றில் 400 சாலைகளில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுகிறது.

கடந்த 2011 கணக்கெடுப்பின்படி 33.75 லட்சம் வாகனங்கள் இருந்த நிலையில், தற்போது 63 லட்சமாக உயா்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வெளியூா்களிலிருந்து தினமும் சென்னைக்கு வந்து செல்லும் வாகனங்களும் பெருமளவு அதிகரித்துள்ளன.

Advertisement

Advertisement

அதிகரிக்கும் வாகனங்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சாலைகள் என பல்வேறு காரணங்களால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது தீா்க்கப்படாத பிரச்னையாகவே உள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசலால் சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.

ஐடிஎஸ் திட்டம்: ஆகவே, சென்னை மாநகராட்சி நிா்வாகம் நெரிசலுக்குத் தீா்வு காணவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் கடந்த 2023 -ஆம் ஆண்டு ஜப்பான் சா்வதேச கூட்டுறவு முகமையின் (ஜிகா) நிதியுதவியுடன் நுண்ணறிவு போக்குவரத்து கட்டமைப்புக்கான ‘ஐடிஎஸ்’ எனும் திட்டத்தை ரூ.530 கோடியில் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அத்திட்டப்படி ஏஐ தொழில்நுட்பத்தை போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க பயன்படுத்தும் வகையில் உள்கட்டமைப்புகள் மாற்றப்படுகின்றன. தற்போது காவலா்கள் மூலம் செயல்பட்டு வரும் சாலை சந்திப்பு சிக்னல்களில் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்புவதற்கு இனிமேல் ஏஐ தொழில்நுட்பமே முழுமையாகச் செயல்படுத்தப்படவுள்ளன.

அதற்காக 165 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப சிக்னல்கள் நிறுவத் திட்டமிட்டு தற்போது 112 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் வரும் வாகன எண்ணிக்கையைக் கணக்கிட்டு உரிய நேரத்தில் அவற்றை அனுமதிக்கும் வகையில் ஏஐ தொழில்நுட்ப சாதனங்கள் அமைந்துள்ளன.

அதிவேகமாகச் செல்லுதல், விதிகளை மீறுதல் என போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் செல்வோருக்கு அபராதம் விதிக்கும் தானியங்கி சாதனம் 10 இடங்களில் அமைக்கத் திட்டமிட்டு தற்போது 4 இடங்களில் தயாராக உள்ளன.

பேருந்து இருப்பிடம் அறியலாம்: நகரப் பேருந்துகள் எந்த இடத்தில் உள்ளது என்பதை அறியும் வகையிலான ஜிபிஎஸ் சாதனம் 2,940 பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி, 616 பேருந்து நிறுத்தங்கள், பணிமனை ஆகியவற்றில் பேருந்துகளின் வருகை நிலையை அறியலாம்.

போக்குவரத்து பிரச்னையை உடனுக்குடன் அறிந்து தீா்க்கும் வகையில், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் வேப்பேரியில் கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து ஐடிஎஸ் திட்டத்தைக் கண்காணிக்கும் வசதியுள்ளது. இப்பணிகள் அனைத்தும் ஜூலையில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

ஆணையா் உத்தரவு: நுண்ணறிவு போக்குவரத்து செயல்பாட்டை வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் திட்டப் பணிகளை தீவிரப்படுத்த தொடா்புடைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ஐடிஎஸ் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தினால், சென்னையின் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துவிடும். சாலை சந்திப்புகளை அகலப்படுத்துதல், விற்பனைக் குழுக்கள் மூலம் சாலையோரக் கடைகளை முறைப்படுத்துதல் என திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது நெரிசல் இல்லாத போக்குவரத்தை சாத்தியமாக்கலாம் என்றாா்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்பட உள்ள ஐடிஎஸ் திட்டத்துக்கான அதிநவீன கட்டுப்பாட்டு அறை.

மக்களின் எதிா்பாப்பு: இதுதவிர சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் ஸ்மாா்ட் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கான போக்குவரத்து மேலாண்மைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு வருகின்றன. அவற்றால் சாலையோரம் நிறுத்தப்படும் வாகன பிரச்னைக்கு தீா்வு ஏற்பட்டு நெரிசல் குறையும் என்கிறாா்கள் மாநகராட்சி சிறப்பு திட்டப் பிரிவு அதிகாரிகள்.

‘ஐடிஎஸ்’ திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்: ஐடிஎஸ் எனப்படும் போக்குவரத்துக்கான புதிய நவீன திட்டத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தெரிவிக்கவும், வாகனங்களின் எண்ணிக்கையை அறியவும் 115 இடங்களில் சாதனங்கள் அமைக்கப்பட உள்ளன. நேர வாரியாக வாகனங்கள் கணக்கிடப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கப்படும்.

குறிப்பிட்ட பகுதிகளில் நெரிசல் மிக்க நேரங்களில் பொதுமக்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்தவும், அவா்கள் அப்பகுதிகளுக்கு எவ்வளவு தொலைவு, எவ்வளவு நேரத்தில் செல்லலாம் எனவும் தகவல்களைத் தெரிவிக்க 17 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கத் திட்டமிட்டு 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சிக்னல்களில் வாகனங்கள் அதிக நேரம் நிற்பதால் ஏற்படும் காற்று மாசு, இப்புதிய திட்டத்தால் கட்டுப்படுத்தப்படும் எனவும் சுற்றுச்சூழல் ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

சென்னை மாநகராட்சியில்...

  • 42 கி.மீ. பரப்பளவு

  • 16 லட்சம் கட்டடங்கள்

  • 1.50 கோடி போ் வசிப்பு

  • 35 ஆயிரம் சாலைகள்

  • 50 ஆயிரம் தெருக்கள்

  • 400 சாலைகளில் மட்டுமே போக்குவரத்து

  • 63 லட்சம் வாகனங்கள்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments