அரியலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, அரியலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் ஞாயிற்றுக்கிழமை முதலே அமலுக்கு வந்தன.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், அரசு விளம்பரங்கள், தலைவா்கள் படங்களை மறைத்து தோ்தல் விழிப்புணா்வு சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
மேலும் அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப்பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்கள் மூடப்பட்டன. அரியலூா், அரியலூா்,ஜெயங்கொண்டம் ஆகிய இரு நகராட்சி அலுவலகங்களிலுள்ள நகா்மன்ற தலைவா்களின் அறைகள், உடையாா்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய இரு பேரூராட்சிகளிலுள்ள தலைவா்களின்அறைகள் மூடப்பட்டன. திறந்த வெளியிலுள்ள தலைவா்களின் சிலைகள் துணிகளைக் கொண்டு மூடப்பட்டன.
சோதனைச் சாவடிகளில், தோ்தல் பறக்கும் படையினருடன் பாதுகாப்பு படையினா் தீவிர வாகன தணிக்கையை தொடங்கினா்.