கரூர்

நற்சிந்தனையைத் தூண்டுமிடமாக சிறைச்சாலை இருக்க வேண்டும்

DIN

நற்சிந்தனையை தூண்டும் இடமாக சிறைச்சாலை இருக்க  வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ். 
கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம், கரூர் கிளைச்சிறை சார்பில் 51 ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி கிளைச் சிறை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில்,  சிறைவாசிகளுக்கு நற்சிந்தனையூட்டும் நூல்களை வழங்கி மேலும் அவர் பேசியது:
சிறைச்சாலை என்பது நல்ல மாற்றத்தின் துவக்கமாக அமைய வேண்டும். குற்றவாளிகள் உருவாகுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக,கோபத்தின் வெளிப்பாடாக குற்றவாளிகள் உருவாகுகிறார்கள்.
சிறைச்சாலை தவச்சாலையாக திகழ வேண்டும். சுதந்திரப் போராட்டக்  காலத்தின் போது சிறைச்சாலை என்பது தியாகிகளின் தவச்சாலையாக இருந்தது. அத்தகைய இடத்தில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். சிறைச்சாலை நற்சிந்தனையை தூண்டும் இடமாக இருக்கவேண்டும். அதற்கு துணையாக இருப்பவை நூல்களே. நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நூல் படிக்கத் தெரியாத சிறைவாசிகளுக்கு படிக்க தெரிந்த சிறைவாசிகள் உதவ வேண்டும். 
 உடல், மனம், அறிவு என்பது மனித வாழ்வு சார்ந்தது. உடலை பேணிக்காப்பதோடு மனதை நெறிப்படுத்தி வாழும்போதுதான் நம்மிடம் உள்ள அறிவு நல்லறிவாக பிறருக்கு பயன்படும் பேரறிவாக மாறும். நீங்கள் என்ன காரணத்திற்காக சிறைச்சாலைக்கு வந்தீர்கள் என்பது முக்கியமல்ல. இதற்கு பிறகாவது சிந்தனை மாற்றம் அடைந்து, நல்ல மாற்றமாக அமைய வேண்டும்  என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ். இந்த நிகழ்வுக்கு  கரூர் மாவட்ட நூலக அலுவலர் மா.கார்த்திகேயன் தலைமை வகித்தார். நூலகர் செ.செ.சிவகுமார்  முன்னிலை வகித்தார். வாசகர் வட்டத் துணைத் தலைவர் வி.விமலாதித்தன் வாழ்த்திப் பேசினார்.  முன்னதாக  வாசகர் வட்ட நெறியாளர் அ.ச.சேதுபதி வரவேற்றார். கிளைச்சிறை கண்காணிப்பாளர் சீ.லட்சுமணநாராயணன் நன்றி கூறினார். கிளை நூலகர் ம.மோகனசுந்தரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன், நிதீஷ், சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!

மக்களவைத் தேர்தல் நேரலை: இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மோடி தலைமையில் இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

SCROLL FOR NEXT