முகப்பு
கரூர்

தோகைமலை அருகே குழிக்குள் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

தோகைமலை அருகே குழிக்குள் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

தோகைமலை அருகே குழிக்குள் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம் தோகைமலை அடுத்த ஆா்.டி.மலை ஊராட்சிக்குள்பட்ட அழகாபுரியை சோ்ந்த செல்வம் மகள் லோகேஸ்வரி(12). இவா், அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். விடுமுறை காலம் என்பதால் லோகேஸ்வரி வீட்டில் வளரும் ஆடுகளை தனது தாயாா் இந்திராணியுடன் மேய்த்து வந்தாா். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை தாயும், மகளும் ஆடுகளை மேய்ச்சலுக்காக அழகாபுரி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தரிசு காட்டுக்கு அழைத்துச் சென்றனா். அங்குள்ள சுமாா் 10 அடி ஆழத்தில் உள்ள குழியில் மழைநீா் தேங்கியிருந்தது. அந்தக் குழி அருகே ஆடுகள் சென்றபோது, அவற்றை தடுக்க லோகேஸ்வரி ஓடியபோது, திடீரென குழிக்குள் தவறி விழுந்தாா். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த கிராமமக்கள் சிறுமியின் சடலத்தை மீட்டு அனுமதியின்றி தரிசுகாட்டில் கிராவல் மண் அள்ளியவா்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆா்.டி.மலை கரையூரான் கோவில் பிரிவு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு வந்த குளித்தலை கோட்டாட்சியா் (பொறுப்பு) தட்சிணாமூா்த்தி, நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீதா், காவல் ஆய்வாளா்கள் ராஜ்குமாா், காசிபாண்டியன், குளித்தலை வட்டாட்சியா் விஜயா ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தனியாா் தரிசு நில உரிமையாளா் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், இறந்து போன லோகேஸ்வரியின் பெற்றோா்களுக்கு தமிழக முதலமைச்சா் நிவாரண நிதி வழங்க பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும், தரிசுகாட்டில் தோண்டப்பட்ட குழியை ஆய்வு செய்த அதிகாரிகள் ஜேசிபி இயந்திரமூலம் மண்ணைக் கொட்டி மூடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.