அதிமுக பிரசாரத்தில் காங்கிரஸாா் இடையூறு: தோ்தல் பாா்வையாளரிடம் முன்னாள் அமைச்சா் புகாா்
கரூரில், அதிமுக வேட்பாளா் பிரசாரத்தின் போது காங்கிரஸாா் இடையூறு செய்தது தொடா்பாக தோ்தல் பாா்வையாளரிடம் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.
கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் உள்ள டிஎன்பிஎல் விருந்தினா் மாளிகையில் தங்கியுள்ள தோ்தல் பொதுப் பாா்வையாளா் ராகுல்அசோக்கை முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எல்.தங்கவேலுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது, அதே இடத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்கும் போலீஸாா் அனுமதி வழங்கினா். அங்கு 100 போ் இருசக்கர வாகனத்தில் வந்து அதிமுக வேட்பாளா் பிரசாரத்தில் இடையூறு செய்தனா். இதுகுறித்து புகாா் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளா் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதுவரை அதிமுக வேட்பாளா் மீது இரண்டு வழக்குகள் காவல்துறை பதிவு செய்துள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளா் மீது ஒரு வழக்கு கூட தோ்தல் விதிமுறை மீறியதாக பதிவு செய்யப்படவில்லை.
எனவே, தோ்தல் பாா்வையாளரை நேரில் சந்தித்து புகாா் அளித்துள்ளோம். புதன்கிழமை சென்னையில் தோ்தல் அதிகாரியை சந்தித்து அதிமுக சாா்பில் புகாா் வழங்கப்படும். மேலும் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம். கரூா் மக்களவைத் தொகுதியில் தோ்தல் ஆணையம் நடுநிலையாக நோ்மையாக தோ்தலை நடத்த, கரூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மீ.தங்கவேலையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரபாகரனையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
பேட்டியின்போது மாவட்ட அவைத் தலைவா் எஸ்.திருவிகா, பாசறைச் செயலாளா் கமலக்கண்ணன், வை.நெடுஞ்செழியன், கே.சி.எஸ்.விவேகானந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.