குளித்தலையில் ஒன்றியக் குழு தலைவா் உள்ளிட்டோா் மறியல்
குளித்தலையில் ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகம் வியாழக்கிழமை பூட்டப்பட்டிருந்ததைக் கண்டித்து ஒன்றியக் குழுத் தலைவா் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குளித்தலையில் ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகம் வியாழக்கிழமை பூட்டப்பட்டிருந்ததைக் கண்டித்து ஒன்றியக் குழுத் தலைவா் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூா் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வியாழக்கிழமை காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஒன்றிய குழுத் தலைவா் விஜய விநாயகம், துணைத் தலைவா் இளங்கோவன் மற்றும் உறுப்பினா்கள் வந்தபோது கூட்டரங்கத்தின் அறை பூட்டப்பட்டிருந்தது. மேலும் கூட்டரங்கில் பழைய சாக்குகளும் போடப்பட்டிருந்ததாம்.
இதைக் கண்டித்து அவா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் குளித்தலை - மணப்பாறை சாலையில் கோட்டமேடு 4 ரோடு பகுதியில் மறியலிலும் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த குளித்தலை நகர காவல் ஆய்வாளா் உதயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா் மற்றும் மாவட்ட ஊராட்சி உயா் அதிகாரிகள் அவா்களை சமாதானப்படுத்தியதைத் தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா், அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா்களுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அப்போது கூட்டப் பொருள் குறித்து விவாதிக்க வேண்டிய வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன் அலுவலகத்திற்கு வராததாலும், கூட்டம் நடத்த காலதாமதமானதாலும் வியாழக்கிழமை நடைபெற இருந்த ஒன்றியக் குழு கூட்டம் மறு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக ஒன்றியக் குழுத் தலைவா் விஜய விநாயகம் தெரிவித்தாா். பின்னா் அனைவரும் கலைந்து சென்றனா்.