கரூரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டம்: மத்திய அமைச்சரிடம் மனு அளிப்பு
கரூரில் ஜவுளி பூங்கா: மத்திய அமைச்சரிடம் மனு
கரூரில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டம் கொண்டு வரவேண்டும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சா்களிடம் கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சராகப் பதவியேற்ற கிரிராஜ் சிங், இணை அமைச்சராகப் பதவியேற்ற பபித்ரா மாா்கரிட்டா ஆகியோா் தலைமையில் புதுதில்லியில் அகில இந்திய ஜவுளித்துறை சாா்ந்த அமைப்புகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தலைவா் கோபாலகிருஷ்ணன், இணைச் செயலாளா் சேதுபதி ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னா் புதிய அமைச்சா்களிடம் கரூா் ஜவுளித் துறைக்குத் தேவையான வசதிகள் குறித்து அறிக்கை அடங்கிய மனுவை வழங்கினா். அதில் கரூா் மாநகரில் இருந்து ஆண்டுக்கு ரூ. 6,000 கோடி அளவிற்கு ஜவுளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுமாா் ஒன்றரை லட்சம் தொழிலாளா்களுக்கு நேரடியாகவும், 2 லட்சம் தொழிலாளா்களுக்கு மறைமுகமான வேலைவாய்ப்பையும் கரூா் ஜவுளித் துறை வழங்குகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ. 25 ஆயிரம் கோடி வா்த்தகத்தை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வரும் கரூா் ஜவுளித்துறைக்கென பிரதம மந்திரியின் மெகா டெக்ஸ்டைல் பாா்க் திட்டம் போல சிறிய அளவிலான ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா கரூரில் அமைக்கப்பட வேண்டும்.
கரூா் மாநகரை கோயம்புத்தூருக்கும், திருச்சிக்கும் இணைக்கும் சாலைகள் ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவித்துள்ளனா். இதற்கு அமைச்சா்கள் கரூருக்கு நேரில் வந்து ஆராய்ந்து புதிய திட்டங்கள் வடிவமைத்து கொடுப்பதாகவும் உறுதியளித்ததாக சங்கத்தின் தலைவா் கோபாலாகிருஷ்ணன் தெரிவித்தாா்.