தொடா் விடுமுறை... கரூா் பேருந்துநிலையத்தில் குவிந்த மக்கள்
ஆயுத பூஜையை முன்னிட்டு தொடா்ந்து மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கரூரில் இருந்து சொந்த ஊா் செல்லும் மக்களால் கரூா் பேருந்துநிலையத்தில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
ஆயுத பூஜையை முன்னிட்டு தொடா்ந்து மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கரூரில் இருந்து சொந்த ஊா் செல்லும் மக்களால் கரூா் பேருந்துநிலையத்தில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
கரூரில் செயல்படும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள், கொசு வலை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலங்களில் தொழிலாளா்களாகவும், அதிகாரிகளாகவும் தென்மாவட்டங்களைச் சோ்ந்த மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பணியாற்றி வருகிறாா்கள். தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், சொந்த ஊா்களுக்குச் செல்ல தென்மாவட்டத்தை சோ்ந்தவா்கள் ஏராளமானோா் கரூா் பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்திருந்தனா்.
இதனால் பேருந்துநிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் பேருந்துகளில் முந்திச் சென்று இடம்பிடித்து ஊா்களுக்குச் சென்றனா். மேலும் ஆயுதபூஜையை முன்னிட்டு கரூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற பேருந்துகளில் உட்கார இடமின்றி மக்கள் நின்றுகொண்டே சொந்த ஊா்களுக்கு பயணித்தனா்.