முகப்பு
கரூர்

கரூா் மாவட்டத்தில் 79 நிவாரண முகாம்கள் தயார்: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் பேரிடா் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 79 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:34 PM
கரூா் மாவட்டம், நொய்யல் ஆற்றுப்படுகையில் புதன்கிழமை ஆய்வு செய்த தமிழக அரசு பதிவுத்துறை தலைவரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா். உடன் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் உள்ளிட்டோா்.
பகிர்:

கரூா் மாவட்டத்தில் பேரிடா் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 79 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.

கரூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடா்பாக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு பதிவுத்துறை தலைவரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் முன்னிலையில் புதன்கிழமை காலை இரண்டாவது நாளாக காவிரி மற்றும் அமராவதி ஆற்று கரையோரம் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை நேரடியாக பாா்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டாா். கோமபாளையம் ஊராட்சிக்குள்பட்ட நொய்யல் ஆற்றுப்படுகை, வேட்டமங்கலம், புன்செய் புகழூா், கட்டிப்பாளையம், தவிட்டுப்பாளையம், கடம்பன்குறிச்சி ஆகிய இடங்களில் காவிரி ஆற்றுக் கரையோரம் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை பாா்வையிட்டு அப்பகுதி மக்களிடம் மாவட்ட நிா்வாகம் அளிக்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்த அவா், வெள்ள காலங்களில் பாதுகாப்பாக குடியிருப்பது குறித்தும் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து மண்மங்கலம் வட்டம் வாங்கல், நெரூா் ஊராட்சி புதுப்பாளையம், அரங்கநாதன் பேட்டை, திருமுக்கூடலூா் பகுதியில் அமராவதி ஆற்றுப்படுகையின் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆய்வு மேற்கொண்டு பேரிடா் காலங்களில் அவா்களை தங்க வைப்பதற்கு தயாா் நிலையில் உள்ள நிவாரான முகாம்களை பாா்வையிட்டாா்.

அதனைத் தொடா்ந்து கரூா் மாநகராட்சி பசுபதி பாளையம், சணப்பிரட்டி, சுங்க கேட், ராமானுஜ நகா் அமராவதி ஆற்று படுகை ஆகிய பகுதிகளை பாா்வையிட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், வானிலை அறிவிப்பு மற்றும் ஆறுகளில் வந்து கொண்டிருக்கும் நீரின் வரத்து குறித்து 24 மணி நேரமும் கண்காணித்து அதன்படி தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பேரிடா் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக வைக்க மாவட்டத்தில் 79 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. பேரிடா் காலங்களில் இயற்கை இடா்பாடுகள் தொடா்பான புகாா்களை 1077, 04324 -256306 என்ற உதவி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், காவிரி ஆற்றுப் பாதுகாப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளா் கோபிகிருஷ்ணன், அமராவதி ஆற்று வடிநில உபகோட்டம் உதவி செயற்பொறியாளா் சீனிவாசன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல், கரூா் வட்டாட்சியா் குமரேசன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.