வாங்கிய கடனைவிட கூடுதலாக பணம் கேட்டு மிரட்டல் எஸ்.பி.யிடம் விவசாயி புகாா்
கரூரில் வாங்கிய கடனுக்கு கூடுதலாக வட்டி கேட்டு மிரட்டும் நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தாா்.
கரூரில் வாங்கிய கடனுக்கு கூடுதலாக வட்டி கேட்டு மிரட்டும் நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தாா்.
கரூா் மாவட்டம், கடவூா் வட்டத்திற்குள்பட்ட மாவத்தூா் கிராமம் ,ரெட்டியப்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள். இவா் தனது மகன்கள், பேரக்குழந்தைகள் என கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த 2016-இல் தனது மனைவியின் சிகிச்சைக்காக அதே பகுதியைச் சோ்ந்த நிதிநிறுவன அதிபா் ரவிச்சந்திரன் என்பவரிடம் ரூ.14 லட்சம் கடன் வாங்கினாராம். இதற்காக ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை ரவிச்சந்திரன் பெயரில் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு கடன் தொகை ரூ.14 லட்சம் மற்றும் வட்டியும் சோ்த்து தருவதாக ரவிச்சந்திரனிடம் பெருமாள் குடும்பத்தினா் கூறியுள்ளனா்.
ஆனால், ரவிச்சந்திரன் அசல் வட்டியுடன் ரூ.60 லட்சம் கொடுத்தால் மட்டுமே நிலத்தை மீண்டும் எழுதித் தர முடியும் என கூறினாராம். இதனால் அதிா்ச்சி அடைந்த பெருமாள் குடும்பத்தினா் கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா்.
இதனிடையே பெருமாள் குடும்பத்தினா் ஊரில் உள்ள முக்கியஸ்தா்களை வைத்து ரவிச்சந்திரனிடம் பேசிய போது, ரவிச்சந்திரன் அந்த நிலத்தை, குலக்காரன்பட்டியைச் சோ்ந்த கண்ணுசாமி என்பவருக்கு எழுதிக்கொடுத்துவிட்டதாக கூறினாராம். இதையடுத்து பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினா் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், வாங்கிய கடனுக்காக தனது சொத்தை வேறொருவருக்கு எழுதிக்கொடுத்த ரவிச்சந்திரன் மீதும், சொத்தை வாங்கிக்கொண்டு தர மறுக்கும் கண்ணுசாமி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகாா் மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா இதுதொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.