நொய்யல் ரயில்வே கேட் திடீா் மூடல்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
கரூா் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் வியாழக்கிழமை திடீரென மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
கரூா் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் வியாழக்கிழமை திடீரென மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
கரூா் மாவட்டம் நொய்யல் ரயில்வே கேட் வழியாக கோவை, பல்லடம், திருப்பூா், காங்கேயம், ஈரோடு, வெள்ளகோவில் ,கொடுமுடி, அரவக்குறிச்சி, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பரமத்திவேலூா், நாமக்கல் ,சேலம், திருச்செங்கோடு, சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் , அதேபோல் அந்தப் பகுதிகளில் இருந்து ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், லாரிகள், வேன்கள், காா்கள், கரும்பு பாரம் ஏற்றிச்செல்லும் டிராக்டா்கள், இருசக்கர வாகனங்கள் போன்றவை இரவு பகலாக சென்று வருகின்றன.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை நொய்யல் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக திடீரென கேட்டை அதிகாரிகள் மூடிவிட்டனா். முன்னறிவிப்பின்றி திடீரென கேட் மூடப்பட்டதால் எந்த வாகனமும் நொய்யல் ரயில்வே கேட் வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் நொய்யல் குறுக்குச் சாலையில் இருந்து புன்னம் சத்திரம் சென்று அங்கிருந்து காகித ஆலை, வேலாயுதம்பாளையம் வழியாக பரமத்திவேலூா், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தன . இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
அதேபோல் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூா், திருக்காடுதுறை வழியாக எந்த வாகனமும் செல்லாததால் பேருந்துகளில் வெளியூா் செல்லும் பொதுமக்கள், நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனா் . பராமரிப்பு பணிகள் முடிந்து மாலையில் ரயில்வே கேட் திறக்கப்பட்ட நிலையில், அனைத்து வாகனங்களும் அந்த வழியாக சென்றன.