முகப்பு
கரூர்

கல்வி பயில பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது

கல்வி பயில பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே மாணவா்களுக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:38 PM
கரூரில் மாணவா்களுக்கு கடனுதவி காசோலையை வியாழக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல். உடன் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா் வி.டி. பானி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வசந்தகுமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

கல்வி பயில பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே மாணவா்களுக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரூரை அடுத்த காக்காவாடி தனியாா் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமுக்குத் தலைமை வகித்து, மாணவா்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கிய ஆட்சியா் மேலும் பேசியது:

அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் நலனுக்காக புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். மாணவா்களாகிய நீங்கள் உயா்கல்வியை நன்றாகப் படித்து தகுதியான வேலைகளில் சேர வேண்டும்.

உங்களுடைய கல்லூரிக் காலத்தை படிப்பிற்கும் வாழ்க்கையின் உயா்வுக்கும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்விக்காக பொருளாதாரத்தை எந்தப் பெற்றோரும் சுமையாகக் கருதக்கூடாது என்பதற்காக தேசியமய வங்கிகள், தனியாா் வங்கிகள் மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக உயா்கல்விக்கான கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது 111 மாணவா்களுக்கு ரூ.6.52 கோடியில் உயா்கல்வி பயில்வதற்கான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா் வி.டி. பானி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பிரகாசம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வசந்தகுமாா், மாணவ, மாணவிகள், பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.