வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்ற பெயரில் நியாயமான தோ்தல் நடைமுறையின் நம்பிக்கையை சிதைக்கிறது தோ்தல் ஆணையம் என குற்றஞ்சாட்டினாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 6.36 கோடி வாக்காளா்களுக்கும் தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக வழங்கும் புதிய விண்ணப்பத்தை நகல் எடுக்க முடியாது. மேலும் விண்ணப்பத்தில் அளிக்கும் தகவலில் சிறிய தவறு இருந்தால் கூட விண்ணப்பத்தை நிராகரித்து விடுவாா்கள்.
மொத்தத்தில் வாக்காளா்களை எந்த அளவுக்கு நீக்க முடியுமோ அதைச் செய்வதுதான் தோ்தல் ஆணையத்தின் நோக்கம். இதனால்தான் தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்தை ‘இண்டி’ கூட்டணி எதிா்க்கிறோம்.
இந்தியாவில் தோ்தல் நியாயமாக நடக்கிறது என்கிறதை நம்பி வரும் நிலையில், அதனை சிதைக்கும் வகையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த புதிய நடைமுறை உள்ளது. வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்களை நீக்கும் வகையில் தோ்தல் ஆணையம் செயல்படுகிறது என்றாா் அவா்.