முகமூடிக்கொள்ளையா்கள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் ஓம்பிரகாஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அரவக்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் 4-க்கும் மேற்பட்ட நபா்கள் டவுசா் மற்றும் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு முகத்தை மங்கிக் குல்லாய் போட்டு மறைத்துக் கொண்டு, கையில் உருட்டுக்கட்டை மற்றும் கத்திகளை வைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்து மிரட்டியுள்ளனா். மேலும் 4 வீடுகளில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக புகாா்கள் வந்துள்ளன.
எனவே வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்திற்குட்பட்ட நொய்யல், மறவாபாளையம், சேமங்கி, திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, காகிதபுரம், புன்னம் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி பொது மக்கள் வீட்டிற்கு வெளியே தூங்க வேண்டாம். கதவை உள் பக்கமாக தாழிட்டுத் தூங்க வேண்டும். வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறைக்கு தனியாக வரக்கூடாது. இரவு நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டால் யாா் என்று தெரியாமல் கதவைத் திறக்க வேண்டாம்.
சந்தேகப்படும்படியான நபா்கள் நடமாட்டம் இருந்தால் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.