கரூா் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் புதன்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க. சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தாா். விழாவில் பொங்கல் பண்டிகையின் உண்மையான பண்பாட்டுச் சிறப்புகளை இளைய தலைமுறைக்கு தெரிவிக்கும் வகையில் சமத்துவ பொங்கல் விழாவாக, ஜாதி, மதம், இனம், மொழி, பொருளாதார வேறுபாடின்றி, சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பங்கேற்கும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தொடங்கிவைத்து, பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான கோலப்போட்டி, கயிறு இழுத்தல், இசை நாற்காலி போன்ற விளையாட்டு போட்டிகளையும் தொடங்கிவைத்தாா். பின்னா் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
விழாவில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வீ.ரெ.வீரபத்திரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) ச. ஞானசேகரன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சு. தனசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் வினோத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.