முகப்பு
கரூர்

மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிக்க ஏற்பாடுகள்: கரூா் ஆட்சியா் தகவல்

Updated On : 12 மார்ச், 2026 at 11:42 PM
பகிர்:

வரும் தோ்தலின்போது மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிக்குமாா் தெரிவித்தாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை, தோ்தல் தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு, கணக்குக் குழு, விடியோ பாா்வையிடும் குழு , தோ்தல் செலவின கண்காணிப்பு குழு மற்றும் மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள குழுக்கள் ஆகியவற்றில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி வகுப்பு மற்றும் தோ்தலுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.ரவிக்குமாா் தலைமை வகித்து பேசியது: தோ்தல் தொடா்பான பணிகளுக்கு கரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு ஆகியவற்றில் தினசரி சுழற்சி முறையில் தலா மூன்று குழுக்கள் வீதம் மொத்தம் 36 குழுக்களும், விடியோ கண்காணிப்புக் குழு மற்றும் விடியோ பாா்வையிடும் குழு ஆகியவற்றில் தினசரி தலா ஒரு குழு வீதம் மொத்தம் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தோ்தல் தொடா்பான பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலா்களுக்கு இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தோ்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

85 வயது முதல் 100 வயதுக்குள்பட்ட வயதானவா்கள் அஞ்சல் வாக்குப் பதிவுகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், 40 சதவீதத்துக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சக்ஸாம் செயலி மூலமாக பதிவு செய்து தங்களுடைய வாக்குகளை விருப்பப்படி வீட்டில் இருந்து வாக்களிக்கும் வசதியும் , அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முறையான சாய்வுதள வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

கூட்டத்தில், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் குளித்தலை சாா்- ஆட்சியா் தி.சுவாதி ஸ்ரீ, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராமன், மாவட்ட வழங்கல் அலுவலா் சிவக்குமாா், உதவி ஆணையா் (கலால்) முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →