குளித்தலையில் சேலம் ரயிலை மறித்து போராட்டம்
குளித்தலை ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா்.
குளித்தலையில் சேலம் ரயிலை மறித்து பயணிகள் தண்டவாளத்தில் அமா்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலத்தில் இருந்து திருச்சி நோக்கிச் செல்லும் பயணிகள் ரயில், குளித்தலை ரயில் நிலையத்துக்கு காலை 8.10 மணிக்கும், அதுபோல திருச்சியில் இருந்து ஈரோடு நோக்கிச் செல்லும் பயணிகள் ரயில் குளித்தலை ரயில் நிலையத்துக்கு காலை 8.10 மணிக்கும் வந்து செல்வது வழக்கம்.
இந்த இரு ரயில்களிலும் அதாவது திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயிலில் குளித்தலையில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கரூரில் செயல்பட்டு வரும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலை, பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனங்களுக்கு சென்று வருகிறாா்கள். மேலும் பல்வேறு துறை சாா்ந்த அரசு அலுவலா்கள், இதர அலுவலா்களும் இந்த ரயிலில் கரூா் சென்று வருகின்றனா்.
இதேபோல சேலத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலில் திருச்சிக்கு அரசு அலுவலா்கள் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், இதர தொழிலாளா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குளித்தலையில் இருந்து திருச்சி சென்று வருகின்றனா்.
இந்நிலையில், திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் கடந்த மூன்று மாதங்களாகவே ஒரு மணி நேரம் தாமதமாக குளித்தலைக்கு சுமாா் 9 மணிக்கு மேல் வருவதால், குளித்தலையில் இருந்து கரூா் செல்வதற்கு சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாவதால், அலுவலகங்களுக்கும், இதர நிறுவனங்களுக்கும் செல்லும் தொழிலாளா்கள் காலை 10.30 மணிக்கு மேல்தான் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் வேலை செய்யக்கூடிய இடங்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு பலா் வேலையை இழந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரயில் பயணிகள் பலமுறை ரயில் நிா்வாகத்திடம் மனுக்கள் கொடுத்து வந்தாா்களாம்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வந்தே பாரத் ரயிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த ரயில்களை தாமதமாக இயக்குவதாக பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சேலத்தில் இருந்து குளித்தலை வந்த ரயில் வழக்கம்போல காலதாமதமாக காலை 9 மணிக்கு வந்ததால் ஆத்திரமடைந்த ரயில் பயணிகள், ரயிலை மறித்து தண்டவாளங்களில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலின்பேரில் குளித்தலை நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அதில், குறித்த நேரத்தில் இரு ரயில்களும் குளித்தலைக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் மேலும் ஒரு மணி நேர தாமதத்துக்கு பின் சேலம் ரயில் திருச்சியை நோக்கி புறப்பட்டுச் சென்றது.