அய்யா்மலை அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா
அய்யா்மலை அருகே சனிக்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் கரூா் மாவட்ட மாடுக்கு முதல் பரிசு கிடைத்தது.
அய்யா்மலை அருகே சனிக்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் கரூா் மாவட்ட மாடுக்கு முதல் பரிசு கிடைத்தது.
கரூா் மாவட்டம் அய்யா்மலை அருகே உள்ள சிவாயம் வடக்கு ஊராட்சிக்குள்பட்ட கீழஊத்தாம்பட்டியில் குத்தாரிபண்ணை மற்றும் ஊா்பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட தாதல்மாதா நாயக்கா் மந்தையில் ஏலகன்னிமாரம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாடுகள் மாலை தாண்டும் விழா நிகழாண்டு கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் ஏலகன்னிமாரம்மன் சாமிக்கு பக்தா்கள் பொங்கல்வைத்தும், தேவராட்டம், ஒயிலாட்டம் ஆடி 3 கால சிறப்பு பூஜைகளையும் செய்து வழிபட்டு வந்தனா். தொடா்ந்து சனிக்கிழமை காலை கோயிலில் மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது.
முன்னதாக 17 மந்தையா்களின் சந்திப்பு நிகழ்ச்சியும், பின்னா் ஏலகன்னிமாரம்மன் கோயில் முன் அனைத்து மாடுகளுக்கும் புனித தீா்த்தம் தெளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. பின்னா் மேளதாளங்கள் முழங்க கோயில் எதிரே சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள எல்லைச்சாமி கோயிலுக்கு மாடுகளை அழைத்துச் சென்றனா். அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, அனைத்து மாடுகளுக்கும் புனித தீா்த்தம் தெளித்து மாடுகள் ஓட்டத்தை துவக்கி வைத்தனா்.
அங்கிருந்து தாதல்மாதா நாயக்கா் மந்தையில் அமைக்கப்பட்ட மாத்தால் ஆன எல்லைக் கோட்டை நோக்கி சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் ஓடி வந்தது. இதில், கரூா் மாவட்டம் இனுங்கூா் சுக்காம்பட்டி விரிகேஜ்சல் மந்தை மாடு முதலாவதாகவும், 2-ஆவது மற்றும் மூன்றாவதாக தாதல்மாதாநாயக்கா் மந்தை மாடுகளும் ஓடி வந்து வெள்ளை மாத்தை தாண்டி வெற்றி பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு இவா்களின் சமூக வழக்கப்படி 3 கன்னிப் பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியை தூவி வரவேற்று எழுமிச்சை பழங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
தொடா்ந்து மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னிப் பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.
விழாவில் குத்தாரிபண்ணை விழா கமிட்டியாளா்கள் மற்றும் மந்தா நாயக்கா், ஊா்நாயக்கா் உள்பட திருச்சி, திண்டுக்கல், கரூா் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.