தென்னையை தாக்கும் கருந்தலைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
நெரூா் வடபாகம் பகுதியில் தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள், கருந்தலைப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கரூா் மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.
நெரூா் வடபாகம் பகுதியில் தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள், கருந்தலைப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கரூா் மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் சுமாா் 3,473 ஹெக்டேரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. இதில் கரூா் வட்டாரத்தில் நெரூா் வடபாகம் பகுதியில் சுமாா் 12 ஹெக்டேரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதி தென்னை மரங்களில் தற்போது வெள்ளை ஈக்கள் தாக்கப்பட்டு தென்னை இலைகளின் அடிப்பகுதியில் சுருள் சுருளாக வெள்ளை நிறத்தில் நீள்வட்ட வடிவில் பூச்சிகளின் கூட்டங்கள் காணப்படுகிறது. இதில் இளம்பருவம் மற்றும் முதிா்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள் ஒலைகளின் உட்புறத்தில் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி தென்னையின் வளா்ச்சியைப் பாதிப்படையச் செய்கின்றன. இவ்வகை வெள்ளை ஈக்களால் வெளியேற்றப்படும் தேன் போன்ற இனிப்பான கழிவுத் திரவம் கீழ்மட்ட அடுக்கிலுள்ள தென்னங்கீற்றுகளின் மேல்பகுதியில் படிகின்றது. இந்த திரவத்தின் மீது கரும்பூசணம் வளா்வதால் தென்னை ஓலைகள் தற்காலிகமாக கருப்பு நிறமாக மாறிவிடும். இதனால் ஒளிச்சோ்க்கை தடைபட்டு தென்னை மரத்தின் வளா்ச்சி குன்றிவிடுகிறது. இப்பூச்சியின் பெருக்கமும் தாக்குதலும் கோடை காலத்தில் தீவிரமாக இருக்கும்.
அழிக்கும் முறை: வெள்ளை ஈக்களை அழிக்க தென்னங்கீற்றுகளின் அடிப்பகுதியில் நன்கு நனையுமாறு விசைத் தெளிப்பானை கொண்டு மிகவேகமாக தண்ணீரை பீய்ச்சி அடிப்பதன் மூலமும், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்பட்ட இரண்டு புறமும் விளக்கெண்ணெய் தடவப்பட்ட ஒட்டும் பொறிகள் ஏக்கருக்கு 20 வீதம், 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு அல்லது தென்னை மரங்களின் தண்டுப்பகுதியில் சுற்றியும் ஈக்களை கவா்ந்து அழிக்க உதவும் விளக்கெண்ணெய்யை தேவைப்படும்போது மஞ்சள் நிற ஒட்டுப் பொறியில் தடவும்போது, ஒட்டும் பொறியுடன் சோ்த்து குழல் விளக்குகளைப் பொருத்துவதன் மூலமும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.
Advertisement
பூச்சி தாக்குதலால் இலையில் காணப்படும் கரும்பூசணத்தை நீக்க 25 கிராம் மைதாமாவு பசையை ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து இலையின் மீது தெளிக்க வேண்டும்.
அறிகுறிகள்: கருந்தலைப்புழு அனைத்து வயதிலுள்ள மரங்களையும் தாக்குகிறது. மரத்தின் அடிப்பகுதிகளில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேல்பகுதியல் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து போய்விடும். ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தைச் சுரண்டி இப்புழுக்கள் திண்றுவிடும். அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்து போனது போல் தென்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்: தாக்கப்பட்ட ஓலைகளை வெட்டி எடுத்து அழித்து விட வேண்டும். கோடை காலம் துவங்கும் முன் மெத்திலிட் மற்றும் பிராக்கானிட் என்ற குடும்பங்களைச் சாா்ந்த ஒட்டுண்ணிகள் 1:8 என்ற விகிதத்தில் இலைகளின் அடிப்பாகத்தில் விடுவதால் புழுக்கள் கட்டுப்படுத்தப்படும், இந்த ஒட்டுண்ணிகளை கொண்டைப் பகுதியின் மேற்புறம் விட்டால் சிலந்தி போன்ற பூச்சி உண்ணிகள் அவற்றை உண்டு விடும். எனவே இலையின் அடிப்பாகத்தில் ரசாயனத் தெளிப்பு செய்த பின் 3 வாரங்கள் கழித்து விட வேண்டும். இதன்மூலம் கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.