காவல்துறையில் சட்ட ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
பெரம்பலூா் மாவட்டக் காவல்துறையில் சட்ட ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டக் காவல்துறையில் சட்ட ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டக் காவல்துறையில் சட்ட ஆலோசகராகப் பணிபுரிய, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு இளங்கலை சட்டப் படிப்பு முடித்த அல்லது, அதற்கு இணையான எல்.எல்.பி, பி.ஏ எல்.எல்.பி, பி.காம் எல்.எல்.பி, பி.சி.ஏ எல்.எல்.பி ஆகிய படிப்பில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு வழக்குரைஞா் சங்கத்தில் பதிவு செய்து, ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் வழக்குரைஞராக பணிபுரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரா் எவ்வித குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது. இப்பதவிக்கு ஓராண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே தோ்வு செய்யப்படுவாா். பணி திருப்திகரமாக இல்லாதபட்சத்தில், ஒப்பந்த காலம்
முடிவடையும் முன்பே எவ்வித முன்னறிவிப்பின்றி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
தோ்வு செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 26 ஆயிரம் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் டிசம்பா் 31- ஆம் தேதிக்குள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து மற்றும் நோ்காணல் தோ்வு பின்னா் அறிவிக்கப்படும்.