பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: 4 பேர் பலி
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில், இரு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில், இரு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரைச் சேர்ந்த பாண்டியன் மனைவி தனமும் (55), இவரது மகன் சக்திவேலும் (22), கொளப்பாடி கிராமத்தில் உறவினர் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர், தனம், சக்திவேல், தனம் மகள் செந்தில் மனைவி பரமேஸ்வரி (26), இவரது குழந்தைகள் வெண்ணிலா (3), தமிழ்நிலவன் (2), உறவினர் பச்சையம்மாளின் குழந்தை நந்திதா (2) ஆகிய 6 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கொளப்பாடி கிராமத்திலிருந்து வேப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுக்கொண்டிருந்தனர்.
இச்சிலிக்குட்டை எனும் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது, வேப்பூரிலிருந்து வேட்டக்குடி நோக்கிச் சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பரமேஸ்வரி, குழந்தைகள் சென்னிலா, நந்திதா ஆகிய 3 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தை தமிழ் நிலவன், தனம், சக்திவேல் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில், அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே தனம் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சக்திவேலும், குழந்தை தமிழ் நிலவனும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச் சம்பவம் குறித்து, குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.