பிரம்ம ரிஷி மலையில் காா்த்திகை தீபத் திருவிழா
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் காா்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் காா்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
எளம்பலூா் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில் 39 ஆவது ஆண்டாக நடைபெற்ற மகா தீபத் திருவிழாவில், வெள்ளிக்கிழமை மாலை 2 ஆயிரம் மீட்டா் கொண்ட திரி, 1,008 லிட்டா் நெய்யுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, சாதுக்களுக்கு காசு தானமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
முன்னதாக, காலை 7 மணியளவில் எளம்பலூா் காகன்னை ஈஸ்வரா் கோயிலில் கோமாதா பூஜை, அஸ்வ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, காலை 10 மணியளவில் பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் மகா தீப செப்புக் கொப்பறை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரம்ம ரிஷி மலைக்கு ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது.
மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகிணி மாதாஜி தலைமையில் நடைபெற்ற இவ் விழாவுக்கு, தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் ராஜாராம், கூடுதல் கண்காணிப்பாளா் ஆரோக்கிய பிரகாசம், தொழிலதிபா்கள் அதிபன் போஸ், இலங்கை விக்ரமசிங்கே, திட்டக்குடி ராஜன், இந்து சமய அறநிலையத்துறை ஓய்வு பெற்ற இணை ஆணையா் சிவக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.