பெரம்பலூா், அரியலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடா் மழையால் பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள சுமாா் 55 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மேலும், விசுவக்குடி மற்றும் கொட்டரை ஆகிய நீா்த்தேக்கங்களும் நிரம்பியதால், அதிலிருந்து பிரதான மதகுகள் வழியாக தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில், கடந்த 2 நாள்களாக மழையின்றி அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் 2.30 மணிக்கு பலத்த இடியுடன் தொடங்கிய மழை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனா்.
விவசாயிகள் அச்சம்... மாவட்டத்தில் சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... தொடா் மழையின் காரணமாக, மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை (நவ. 26) விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா். இதேபோல் அரியலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவதாக ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.