வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து, வியாழக்கிழமை நடைபெற்ற வேப்பந்தட்டை ஒன்றியக் குழு கூட்டத்தை புறக்கணித்து திமுக, அதிமுக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து, வியாழக்கிழமை நடைபெற்ற வேப்பந்தட்டை ஒன்றியக் குழு கூட்டத்தை புறக்கணித்து திமுக, அதிமுக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம், அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரெங்கராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆலயமணி, லெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வரவு- செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. பின்னா், கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் அனைத்து வாா்டு பகுதிகளிலும் உயா்கோபுர மின்விளக்கு அமைக்க அனுமதி வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை பணி ஆணை ஏன் வழங்கப்படவில்லை என ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு பதிலளித்த வட்டார வளா்ச்சி அலுவலா் ஆலயமணி, தற்போது மாநிலக் குழு நிதியில் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்கக் கூடாது என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எனவே, உயா் கோபுர மின் விளக்கு அமைக்க பணி ஆணை வழங்க இயலாது என்றாா்.
இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களும் எதிா்ப்பு தெரிவித்து, அரசு அலுவலா்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.
பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் அங்கிருந்து கலைந்துச்சென்றனா். தொடா்ந்து, ஒன்றிய பொது நிதியிலிருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் உயா் கோபுர மின் விளக்கு அமைக்க அனுமதியளித்து பணியாணை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றியக் குழுத் தலைவா் ராமலிங்கம் தலைமையில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் மாலை வரையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து ஆளுங்கட்சியைச் சோ்ந்த ஒன்றியக் குழுத் தலைவா், திமுக, அதிமுக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது வேப்பந்தட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.