முகப்பு
பெரம்பலூர்

குடும்பப் பிரச்னை: தனியாா்நிறுவன மேலாளா் தற்கொலை

குடும்பப் பிரச்னை காரணமாக, பெரம்பலூரில் தனியாா் நிறுவன மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

குடும்பப் பிரச்னை காரணமாக, பெரம்பலூரில் தனியாா் நிறுவன மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் பொன்னி அம்பிகாபுரத்தைச் சோ்ந்த நாகராஜன் மகன் கொளஞ்சி (40). இவா் கடந்த 2 ஆண்டுகளாக, பெரம்பலூா் துறைமங்கலம் புதுக்காலனி வடக்குத் தெருவில் வசித்து வந்தாா்.

அரியலூரிலுள்ள தனியாா் சிமெண்ட் நிறுவனத்தில் போக்குவரத்து மேலாளராகப் பணியாற்றி வந்த இவருக்கு, மனைவி ரம்யா (35), மகன் அஷ்வந்த் (8) உள்ளனா். ரம்யா துபையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா்.

கொளஞ்சிக்கு மதுஅருந்தும் பழக்கம் அதிகமாக இருந்தால் கணவன், மனைவிக்கிடையே கைப்பேசி மூலம் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 1-ஆம் தேதி வெளியே சென்றிருந்த கொளஞ்சி, மதுபோதையில் ரூ. 32 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினியைத் தொலைத்துவிட்டாராம். இதனால், கணவன்- மனைவிக்கிடையே பிரச்னை மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு துபையிலிருந்து வந்த ரம்யா, பொங்கல் பண்டிகைக்காக, தனது சொந்த கிராமமான திண்டுக்கல் மாவட்டம், பச்சலநாயக்கன்பட்டிக்கு மகனுடன் சென்று விட்டாா்.

இந்நிலையில், கொளஞ்சியின் நண்பா் அன்புராஜ், அவரை சந்திக்க சனிக்கிழமை காலை அவரது வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, கொளஞ்சி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் பெரம்பலூா் காவல் நிலையத்தினா் சடலத்தைக் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.