பெரம்பலூா், குன்னத்தில் சட்ட விழிப்புணா்வு கலை நிகழ்வு
பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், குன்னம் மற்றும் பெரம்பலூரில் விழிப்புணா்வு கலைநிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், குன்னம் மற்றும் பெரம்பலூரில் விழிப்புணா்வு கலைநிகழ்வு நடைபெற்றது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்திடவும், சட்டப் பாதுகாப்பை அறிந்துகொள்ளும் வகையிலும்
கலைநிகழ்வு நடத்தப்பட்டது.
குன்னம் மற்றும் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற
நிகழ்வுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஆா். லதா தலைமை வகித்தாா்.
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரிப் பேராசிரியா் சதீஷ்குமாா் ஒருங்கிணைப்பில், இசை மற்றும் நடனம் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலை நிகழ்வுகள் மூலம் பெண்கல்வி அவசியம், குழந்தைத் திருமணத்தை தடுத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு, பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளின் சட்ட வழிகள் குறித்த வழிமுறைகளை கதைகள் மற்றும் நாடகங்கள் மூலமாக எடுத்துரைத்தனா். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகளையும் விழிப்புணா்வு நிகழ்ச்சி மூலம் விளக்கி கூறினா்.
நிகழ்வில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவா் முனிக்குமாா், மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவா் சிவகாமசுந்தரி மற்றும் காவல் துறையினா், வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுப் பணியாளா்கள் மற்றும் சட்டத் தன்னாா்வலா்கள் செய்திருந்தனா்.