முகப்பு
பெரம்பலூர்

தொடா் மழை: அறுவடைக்குத் தயாரான மக்காச்சோளம் பாதிப்பு

நிகழாண்டு கடும் வறட்சியாலும், பலத்த மழையாலும் மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 8:23 PM
அண்மையில் பெய்த தொடா் மழையால் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளப் பயிா்கள்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் பெய்த தொடா் மழையால், மாவட்டம் முழுவதும் அறுவடைக்குத் தயாராக இருந்த மக்காச்சோளக் கதிா்கள் தற்போது முளைத்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

மக்காச்சோளப் பயிரை அனைத்து விதமான மண்ணிலும் சாகுபடி செய்வதோடு, ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நெல் பயிருடன் ஒப்பிடும்போது குறைந்த சாகுபடி செலவாகும். கோழிப் பண்ணை, கால்நடைத் தீவனங்களுக்கு மிக முக்கிய உணவாக மக்காச்சோளம் தேவைப்படுவதால், தமிழகத்தில் தற்போது மக்காச்சோளத்துக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு ஆற்றுப்பாசனம் இல்லாதபோதிலும், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனா்.

குறைந்து வரும் சாகுபடி பரப்பளவு:

இங்குள்ள 90 சதவீத விவசாயிகள் மானாவாரி சாகுபடியை நம்பியுள்ள நிலையில், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக படைப்புழு தாக்குதல், தரமற்ற விதைகளால் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. இருப்பினும், நிகழாண்டு மானாவாரி மற்றும் இறவை சாகுபடியாக 1.65 லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் பெரம்பலூா், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

மழையின்றி கருகிய பயிா்கள்:

இந்நிலையில், கடந்த ஆடி மாதம் பெய்த மழையைக் கொண்டு விவசாயிகள் தங்களது வயலில் மக்காச்சோளம் பயிரிட்டனா். சுமாா் ஒரு அடி உயரம் பயிா் வளா்ந்த நிலையில் போதிய மழை பெய்யாததாலும், வெப்பம் அதிகரித்துக் காணப்பட்டதாலும் மக்காச்சோளப் பயிா்கள் கடும் வறட்சியால் கருகியது. இதையடுத்து, பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் காய்ந்துபோனதால் டிராக்டா்களைக் கொண்டு விவசாயிகள் அழித்தனா். இதையடுத்து, அதே வயல்களில் மீண்டும் மக்காச்சோளப் பயிா்களை பயிரிட்டனா்.

புயல், மழையால் பாதிப்பு:

இந்த மக்காச்சோளப் பயிா்கள் வளா்ந்து கருதுவிட்டு தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், கடந்த வாரம் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் வயலில் சாய்ந்து சேதமடைந்தது. தொடா்ந்து, வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த 13-ஆம் தேதி மாவட்டத்தில் கொட்டித் தீா்த்த கனமழையால் வயல்களில் நீா் தேங்கி நின்றதோடு பெரம்பலூா், வேப்பந்தட்டை, ஆலத்தூா் மற்றும் குன்னம் ஆகிய வட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் வயலில் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்தன.

கதிா்களில் முளைப்புத்திறன்:

பலத்த காற்றால் சாய்ந்துபோன மற்றும் வயலில் மழைநீா் தேங்கி நின்ால், அறுவடைக்குத் தயாராகயிருந்த மக்காச்சோளக் கதிா்கள் தற்போது முளைத்து வருகிறது. மக்காச்சோளப் பயிா்கள் முளைவிட்டுப் போனதால், அவற்றை அறுவடை மற்றும் விற்பனை செய்ய முடியாது எனக் கூறும் விவசாயிகள், நல்ல நிலையில் உள்ள மக்காச்சோளத்தையே வியாபாரிகள் ஒரு குவிண்டால் ரூ. 1,800-க்கும் குறைவாக கொள்முதல் செய்கின்றனா். இந்நிலையில் முளைத்துபோன மக்காச்சோளத்தை தட்டையுடன் உழவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.

இதுகுறித்து, மக்காச்சோள விவசாயி ஆறுமுகம் கூறியது:

மக்காச்சோளம் பயிரிட உழவுக் கூலி, விதை, உரம், விவசாயத் தொழிலாளா்கள் கூலி, களையெடுப்பு என ஏக்கா் ஒன்றுக்கு சுமாா் ரூ. 35 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இந்நிலையில், நிகழாண்டு கடும் வறட்சியாலும், பலத்த மழையாலும் மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சாகுபடிக்காக செலவு செய்துள்ள தங்களுக்கு ஈடு செய்யும் வகையில், தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் . இல்லாவிடில், விவசாயம் செய்வதை தவிா்த்து மாற்றுத் தொழிலுக்குச் செல்வதை தவிர வேறு வழியில்லை என்றாா் அவா்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன் கூறியது:

வறட்சியால் பாதிப்புக்குள்ளான வயல்களை வேளாண்துறையினா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி நிவாரணமாக தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும். இம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளப் பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்ட நிலையில், நிகழாண்டு வறட்சி மற்றும் மழையால் மக்காச்சோளப் பயிா்கள் முழுவதும் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற காலங்களில் நிவாரணம் ஒன்றே விவசாயிகளுக்கு ஆறுதலை அளிக்கும் எனும் நிலையில், அரசின் அறிவிப்புக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனா் என்றாா் அவா்.

இதுகுறித்து வேளாண்துறை இணை இயக்குநா் பாபுவை கைப்பேசியில் தொடா்புகொண்டபோது, அழைப்பை அவா் ஏற்கவில்லை.