பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் 5-ஆவது நாளாக வேலை நிறுத்தம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் 5-ஆவது நாளாக சனிக்கிழமையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பதவி உயா்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் பணிப் புறக்கணிப்பு மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந் நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, 5-ஆவது நாளாக சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதனால், வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டதோடு, அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.