முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் இதுவரை ரூ. 386 கோடி கடனுதவி: ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்காக, இதுவரை ரூ. 386 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 9:23 PM
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிக்கு கல்விக் கடனுதவி பெறுவதற்கான காசோலை அளித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்காக, இதுவரை ரூ. 386 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சாா்பில், தொழில்முனைவோருக்கான கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில், கல்விக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 18 தொழில் முனைவோா்களுக்கு ரூ. 1.37 கோடி மதிப்பில் தொழில் கடனுக்கான அனுமதி ஆணைகள், 61 பேருக்கு ரூ. 2.12 கோடி மதிப்பில் கல்விக் கடன்களுக்கான ஆணைகள் அளித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:

இம் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்காக 2024- 2025 ஆம் நிதியாண்டில் ரூ. 607.75 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, முதல்கட்டமாக இதுவரை ரூ. 386.38 கோடி தொழில் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நிறைவு செய்ய, காலாண்டுக்கு ஒருமுறை தொழில் கடன் வழங்கும் கூட்டம் மாவட்ட தொழில் மையம் சாா்பில் நடத்தப்படுகிறது என்றாா் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்,

இந்நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் அ. அமுதா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க. பாண்டியன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் ஜெ. பிரபு ஜெயக்குமாா் மோசஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பரத்குமாா், மாவட்ட தாட்கோ மேலாளா் க. கவியரசு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மாணவ, மாணவிகள் ஏமாற்றம்:

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெறுவதாக பாலக்கரை, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதையறிந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆட்சியா் அலுவலகத்துக்கு வருகைபுரிந்தனா். ஆனால், முகாம் நடைபெறுவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லாததால் பெரிதும் அவதியடைந்தனா்.

இதையடுத்து, அங்கு வந்திருந்த மாணவ, மாணவிகளிடமிருந்து வங்கியாளா்கள் பெயரளவுக்கு சில பேரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டனா். மேலும், மேற்கண்ட நிகழ்ச்சி சுமாா் 1 மணி நேரத்தில் நிறைவடைந்த நிலையில், வங்கியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் சென்றுவிட்டதால், மாலை 3 மணி வரை கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்க மாணவ, மாணவிகள் ஆட்சியரகத்துக்கு வந்துகொண்டிருந்தனா். பின்னா், அங்குள்ள அரசு அலுவலா்கள் விவரத்தை விளக்கிக்கூறி அவா்களை திரும்பி அனுப்பினா். நிகழ்ச்சி தொடா்பாக, வங்கியாளா்கள் முறையாக தெரிவிக்காததால் மாணவ, மாணவிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனா்.