பெரம்பலூா் அறிவுசாா் மையம், காப்பகத்தில் ஆட்சியா் ஆய்வு
பெரம்பலூா் நகராட்சி வளாகத்திலுள்ள அறிவுசாா் மையத்திலுள்ள நூல்களை புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். உடன், நகராட்சி ஆணையா் ராமா்.
பெரம்பலூா் நகராட்சி வளாகத்திலுள்ள அறிவுசாா் மையத்திலுள்ள நூல்களை புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். உடன், நகராட்சி ஆணையா் ராமா்.
பெரம்பலூா், செப். 4: பெரம்பலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அறிவுசாா் மையத்தில் உணவரும் கூடம் அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.
பெரம்பலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையத்தை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், மாணவ, மாணவிகள், போட்டித் தோ்வு எழுதுவோா் பயன்பெறும் வகையில் தற்போது பல்வேறு தலைப்புகளில் 2,287 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இணையதள வசதியுடன் கூடிய 6 கணினிகள் பயன்பாட்டில் உள்ளது என்றாா் அவா். மேலும், அறிவுசாா் மையத்தில் உணவருந்தும் கூடம் அமைத்துத் தருமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.
ஆதரவற்றோா் இல்லத்தில் ஆய்வு:
பின்னா், பெரம்பலூா் தீரன் நகா் அருகேயுள்ள வேலா கருணை இல்லத்தில் ஆதரவற்ற, மனநலன் பாதிக்கப்பட்டோா்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு சேவை மையத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், மனநலன்பாதிக்கப்பட்டவா்களுக்கு மாதந்தோறும் தலா ரூ. 1,200 வழங்கப்படுவது, காப்பாளா், சமையலா், தொழிற்கல்வி பயிற்றுநா், தன்னாா்வலா்கள், ஓட்டுநா், பொறுப்பு அலுவலா், காப்பக காவலா்கள் ஆகியோருக்கு அரசு மூலமாக வழங்கப்படும் ஊதியத்தைக் கேட்டறிந்து, ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த தங்கும் அறைகளைப் பாா்வையிட்டு, படுக்கை அறையில் மெத்தைகள் மற்றும் காற்றோட்டமான சூழ்நிலைகளை ஏற்படுத்தவும், தொலைக்காட்சி வசதி ஏற்பாடு செய்யவும், தேவையான மருந்து மாத்திரைகள் சரியான முறையில் வழங்க வேண்டும் என காப்பகப் பணியாளா்களிடம் அறிவுறுத்தினாா் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.
ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் ராமா், நகராட்சிப் பொறியாளா் பாண்டியராஜன், வட்டாட்சியா் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.