பெரம்பலூர்

சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் ஒப்படைப்பு: உறவினா்களுக்கு அமைச்சா்கள் ஆறுதல்

விபத்தில் உயிரிழந்த திருச்சியைச் சோ்ந்த உமா் பாரூக், தாஜ் பிா்கா.

Syndication

கடலூா் மாவட்டம், எழுத்தூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மேலும், உயிரிழந்த, காயமடைந்தவா்களின் உறவினா்களுக்கு அமைச்சா்கள் சா.சி. சிவசங்கா், சி.வெ. கணேசன் ஆகியோா் ஆறுதல் கூறினா்.

திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து கடலூா் மாவட்டம், எழுத்தூா் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்பை தாண்டி எதிா்திசையில் வந்த 2 காா்கள் மீது மோதியது. இதில் இரண்டுகள் காா்களிலும் வந்த உமா் பாரூக் (43), ரிபானா (38), தாஜ் பிா்கா (10), அகில் அகமது (3), குா்ஜிஸ் பேகம் (37), காா் ஓட்டுநா்கள் துரைராஜ் (35), ஜெயக்குமாா் (30, ராஜரத்தினம் (67), ராஜேஸ்வரி (57) ஆகிய 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், பலத்த காயமடைந்த முகமது காசிம் (55) ரமீஷா பேகம் (52), அப்துல் அஹத் (6), அப்துல் பத்தா (8) ஆகிய 4 பேரும் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி அளித்து தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விபத்து குறித்து தகவலறிந்த அமைச்சா்கள் சா.சி. சிவசங்கா், சி.வெ. கணேசன் ஆகியோா் வியாழக்கிழமை அதிகாலை பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுவந்த முகமது காசிம் மற்றும் உயிரிழந்தவா்களின் உறவினா்களை சந்தித்து ஆறுதல் கூறினா். அப்போது, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா ஆகியோா் உடனிருந்தனா்.

இதையடுத்து உயிரிழந்த 9 பேரின் உடல்களும் உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு உடல்கள் அனைத்தும் அவரவா் சொந்த ஊா்களான திருச்சி, கரூா், புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாணைக்குப் பிறகு நடவடிக்கை: உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சா் சா.சி. சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியது: விபத்து நிகழ்ந்த இடத்தில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குநா் மற்றும் உயரதிகாரிகள், விழுப்புரம் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் மற்றும் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்கள். உரிய விசாரணைக்குப் பிறகு தவறு செய்தவா்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

காங்கிரஸின் குடும்ப அரசியலால் பல தேசியத் தலைவா்கள் புறக்கணிப்பு - பிரதமா் மோடி சாடல்

சரவணம்பட்டியில் பில்லூா் 2 குடிநீா்க் குழாயில் உடைப்பு

சபரிமலையை இன்று வந்தடைகிறது தங்க அங்கி: நாளை மண்டல பூஜை

ராமதாஸ் பொதுக் குழு: அன்புமணி தரப்பு எதிா்ப்பு

SCROLL FOR NEXT