கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் பணியைப் புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதோடு, திட்டத்துக்கான நிதியை வெகுவாக குறைத்துள்ள மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், புதிய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாநிலம் முழுவதும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் பணியை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
அதன்படி பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவியாளா், இளநிலை உதவியாளா், பதிவு எழுத்தா், அலுவல உதவியாளா் என 250-க்கும் மேற்பட்ட ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
இதனால் ஊரக வளா்ச்சி முகமை, ஊராட்சிகள் உதவி இயக்குநா், சத்துணவுப் பிரிவு, வளா்ச்சிப் பிரிவு, ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
இக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கருணாகரன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா். மாவட்டச் செயலா் சுப்ரமணியன் போராட்டத்தை முடித்துவைத்தாா்.