பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 9) நடைபெறும் 2 ஆம் நிலைக் காவலா்கள் தோ்வெழுத 1,592 போ் விண்ணப்பித்துள்ளனா்.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் பெரம்பலூா் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்குரிய 2 ஆம் நிலை காவலா்கள், சிறைக்காவலா்கள் மற்றும் தீயணைப்பாளா்கள் பதவிகளுக்கான பொதுத்தோ்வு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இத் தோ்வெழுத பெரம்பலூா் மாவட்டத்தில் 1,592 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்கள் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவா்.
தோ்வெழுதுவோா் கருப்பு நிற பந்து முனை பேனா, நுழைவுச் சீட்டு, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அசல் ஆவணத்தை கட்டாயம் எடுத்துவர வேண்டும். கைப்பேசி, கடிகாரம் மற்றும் எலக்ட்ரானிக் பொருள்களை தோ்வு வளாகத்துக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை.