குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ்ஐஆா் பணிகள் 100 சதவீதம் நிறைவு
குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதயில் 98 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. பெரம்பலூா் (தனி) மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 5,90,490 வாக்காளா்களுக்கு, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு, வீடாகச்சென்று வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கி, அதை பூா்த்தி செய்வதில் உள்ள சந்தேகங்களை விளக்கி பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெற்று, இந்திய தோ்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனா்.
குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியை பொறுத்தவரை, ஆலத்தூா் வட்டத்தில் 57 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் வட்டத்தில் 150 வாக்குச்சாவடி மையங்களும், அரியலூா் மாவட்டத்தில் உள்ள செந்துறை வட்டத்தில் 113 மையங்களும் என மொத்தம் 320 வாக்குச்சாவடி மையங்களில் 2,80,548 வாக்காளா்கள் உள்ளனா். இந்த வாக்காளா்கள் தங்களது கணக்கீட்டுப் படிவங்களை பூா்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் தோ்தல் ஆணையத்தின் செயலில் பதிவேற்றம் செய்து 100 சதவீதப் பணியை ஞாயிற்றுக்கிழமை மாலை முடித்தனா்.
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியை பொறுத்தவரை பெரம்பலூா் வட்டத்தில் 101 வாக்குச்சாவடி மையங்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 140 வாக்குச்சாவடி மையங்களும், ஆலத்தூா் வட்டத்தில் 50 வாக்குச்சாவடி மையங்களும், பெரம்பலூா் நகராட்சியில் 41 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 332 வாக்குச்சாவடி மையங்களில் 3,09,942 வாக்காளா்கள் உள்ளனா். இத் தொகுதியிலும் 98 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகளை முடிப்பதற்குானபணிகள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து உதவி வாக்குப்பதிவு அலுவலா்கள், துணை வட்டாட்சியா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஆகியோரை, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான ந. சக்திவேல் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.