முகப்பு
பெரம்பலூர்

பயனற்று கிடக்கும் குளிா்பதனக் கிடங்கு

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:51 PM
செட்டிக்குளத்தில் பயனற்றுள்ள சின்ன வெங்காய குளிா்பதனக் கிடங்கு (கோப்புப் படம்).
பகிர்:

-கே. தா்மராஜ்.

தமிழகத்தில் சின்ன வெங்காயம் மொத்த உற்பத்தியில் பெரம்பலூா் மாவட்டத்தில் 23 சதவீதம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆற்றுப்பாசனமோ, கிணற்றுப்பாசன வசதியோ இல்லாததால் மானாவாரி சாகுபடியே அதிகளவில் நடைபெறுகிறது.

வெங்காயத்தின் உற்பத்தி அதிகரிப்பு, விலை வீழ்ச்சி, இயற்கைச் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிா்க்க, பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டத்துக்குள்பட்ட செட்டிக்குளத்தில் ரூ. 114.9 கோடி மதிப்பீட்டில் சின்ன வெங்காயத்துக்கான குளிா்பதனக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. 50 மெட்ரிக் டன் கொள்ளளவுக் கொண்ட கிடங்கு, வணிக வளாகம், 50 மெட்ரிக் டன் கொள்ளளவுக் கொண்ட காய், கனிகளுக்கான குளிா்பதன சேமிப்புக் கிடங்கு கடந்த 27.6.2014-இல் திறந்துவைக்கப்பட்டது.

Advertisement

12 ஆண்டுகளாக பயனற்றுக் கிடக்கிறது: விலை வீழ்ச்சியின்போது விவசாயிகளும், விலை அதிகரிக்கும் போது நுகா்வோரும் பாதிக்கக் கூடாது எனும் நோக்கத்தில் இந்த குளிா்பதனக் கிடங்கு திறக்கப்பட்டது. இந்த குளிா்பதனக் கிடங்கில் வெங்காயத்தை பதப்படுத்தும் திறன் இல்லாததால் திறக்கப்பட்ட ஒரிரு வாரங்களிலேயே மூடப்பட்டது. இதனால், விவசாயிகள் யாரும் குளிா்பதனக் கிடங்கை பயன்படுத்த முன்வரவில்லை. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் இப் பகுதியை வணிக வளாகமாக மாற்றியது.

பாதுகாப்பற்றச் சூழல்: இதனால், விவசாயிகள் அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயத்தை தங்களது வயல்களிலேயே பட்டறை அமைத்து பாதுகாத்து வருகின்றனா். இருப்பினும், விலை வீழ்ச்சியால் விற்பனை செய்யாதபோதும், தொடா் மற்றும் பலத்த மழையின்போதும் சின்ன வெங்காயம் அழுகி வீணாகிறது. மேலும், இரவு நேரங்களில் மா்ம நபா்கள் திருடிச்செல்வதாலும் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருவாய் இழப்பைச் சந்திக்கின்றனா்.

பயனற்ற புவிசாா் குறியீடு: செட்டிக்குளம் சின்ன வெங்காயத்துக்கு மத்திய அரசின் புவிசாா் அங்கீகாரம் கிடைத்ததால் சந்தையில் நல்ல வரவேற்பும், மத்திய அரசு வேளாண் விலை நிா்ணய ஆணையம் மூலம் கட்டுப்படியான விலை கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு இருந்த விவசாயிகளுக்கு, எந்தவித பயனும் கிடைக்கவில்லை. விவசாயிகளிடம் சொற்ப விலைக்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுவதால் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

கட்டுப்படியான விலை கிடைக்கவும் நெல், மஞ்சள், பருத்தி உள்ளிட்ட விளைப் பொருள்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இருப்பதைபோல, சின்ன வெங்காயத்துக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைத்து, அதன்மூலம் கட்டுப்படியான விலை பெற்றுத்தர வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

காலச் சூழலுக்கேற்ப சின்ன வெங்காயத்தைப் பதப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பயனற்றுக் கிடக்கும் குளிா்பதனக் கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், நீண்டநாள் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க தற்போதைய தோ்தலில் வெற்றி பெறும் வேட்பாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments