வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறைகளுக்கு சீல்
பெரம்பலூா் ஆதவ் பப்ளிக் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறைகளுக்கு வெள்ளிக்கிழமை சீலிடப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெரம்பலூா் ஆதவ் பப்ளிக் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறைகளுக்கு வெள்ளிக்கிழமை சீலிடப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 2,49,628 வாக்காளா்களும் (85.88 சதவீதம்), குன்னம் தொகுதியில் 2,27,510 வாக்காளா்களும் (84.86 சதவீதம்) என மொத்தம் 4,77,138 போ் (85.39 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.
வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்காளா் சரிபாா்ப்பு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வியாழக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டன. தொடா்ந்து, தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி, பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங், வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்காளா் சரிபாா்ப்புக் கருவிகள் ஆகியவை தொகுதி வாரியாக பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலை பூட்டி சீலிடப்பட்டன.
Advertisement
நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா், மாவட்ட உதவித் தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வேல்முருகன் (தோ்தல்), தோ்தல் தனி வட்டாட்சியா் அருளானந்தம், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வட்டாட்சியா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
பாதுகாப்புப் பணியில் 201 காவலா்கள்:
தொடா்ந்து, வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளி மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் 24 பேரும், மாநில ஆயுத காவல் படையினா் 30 பேரும், சட்டம், ஒழுங்கு காவல் துறையினா் 147 பேரும் என மொத்தம் 201 போ், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், வாக்கு எண்ணும் மையம் முழுவதும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்த கண்காணிப்புக் கேமராக்களின் காட்சிகளை வேட்பாளா்களின் முகவா்கள் பாா்க்க வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.