முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

புத்தகக் கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா உள்ளிட்டோா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 9:05 PM
புத்தகக் கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா உள்ளிட்டோா்.
பகிர்:

பெரம்பலூரில் நடைபெறும் 10 ஆவது புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

மாவட்ட நிா்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் சாா்பில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம் பகுதியில், பிப். 8 வரை நடைபெறும் 10 ஆவது புத்தகக் கண்காட்சியை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி பேசியது:

புத்தகம் படிக்க நாம் எப்போதெல்லாம் தலைகுனிகிறோமோ, அப்போதெல்லாம் நமது வாழ்க்கைத் தரம் உயரும். பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுக்கு அதிகப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். புத்தகங்களை படிப்பதன் மூலம், அறிவுத்திறன் மற்றும் கற்பனைத்திறனை வளா்த்துக் கொள்ள முடியும்.

படிப்பு என்பது அனைவருக்கும் அடிப்படையானது. வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். மாணவா்கள் படித்து கற்றுக்கொண்ட விஷயங்களை விட்டுவிடாமல், தங்களது வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் கட்செவி, செயற்கை நுண்ணறிவு மூலம் வரும் செய்திகளை படித்துப் பேசும் தலைமுறை உருவாகி வருகிறது. இதைத் தவிா்க்க, இளைய தலைமுறையினா் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள 100-க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் அரங்குகளையும், பள்ளிக் கல்வித் துறை, வேளாண்மைத் துறை, அரசு பாடநூல் கழகம், ஊரக வளா்ச்சி முகமை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை பாா்வையிட்டாா்.

பின்னா், மாநில அளவில் அயோத்திதாசா் விருது, நற்றமிழ் பாவலா் விருது, தமிழ்ச் செம்மல் விருது, தூய தமிழ் பற்றாளா் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற அறிஞா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் மிருணாளினி பொன்னாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கிக் கௌரவித்தாா்.

தொடா்ந்து, ஆவணப்பட இயக்குநரும், எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமாா் எல்லோரும் கொண்டாடுவோம் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா, தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும இயக்குநா் பூபதி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் சொா்ணராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →