பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு 2.91 லட்சம் மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 579 சாலை விபத்துகளில்,206 போ் உயிரிழந்துள்ளனா். 722 போ் காயமடைந்துள்ளனா். அதிவேகமாக வாகனங்களை இயக்கியதாக 2,648 வழக்குகளும், மது போதையில் வாகனங்களை இயக்கியதாக 1,569 வழக்குகளும், தலைகக்வசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்கியதாக 1,42,158 வழக்குகளும், ஷீட் பெஸ்ட் அணியாமல் வாகனங்களை இயக்கியதாக 5,022 வழக்குகளும், கைப்பேசிகளில் பேசியவாறு வாகனங்களை இயக்கியதாக 4,292 வழக்குகளும் என மொத்தம் 2,91,482 மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 34,87,100 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்குகள்
மேலும், பதிவு செய்யப்பட் டுள்ள 66 கஞ்சா வழக்குகளில் 87 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 26,878 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்து. இவ் வழக்குகளில் 2 காா், 7 இருசக்கர வாகனங்கள். ஒரு கைப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குண்டாஸ்
அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தியது, கண்கூச செய்யும் முகப்பு விளக்குகள் பொறுத்தியது, அதிகபாரம் ஏற்றியதற்காக 1,35,794 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மூலம் ஒருவரும், சட்டம்- ஒழுங்கு பிரச்னை தொடா்பாக 5 பேரும், மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரும், குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 2 பேரும், கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 7 பேரும், போக்சோ வழக்கில் 2 பேரும் என மொத்தம் 20 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
சைபா் கிரைம்
மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு போலீஸாரிடம் பெறப்பட்ட 801 புகாா்களில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ரூ. 5 கோடியே 86 லட்சத்து 59 ஆயிரத்து 412 மதிப்பில் மோசடி செய்யப்பட்டதில், ரூ. 3 கோடியே 19 லட்சத்து 21 ஆயிரத்து 973 வங்கி மூலம் பணம் முடக்கப்பட்டுள்ளது.
ரூ. 63 லட்சத்து 54 ஆயிரத்து 497 மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காணாமல் போன 206 கைப்பேசிகள் கண்டறியப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருட்டு வழக்குகள்
இம் மாவட்டத்தில் நிகழ்ந்த 188 குற்ற வழக்குகளில், 102 வழக்குகள் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 107 திருட்டு வழக்குகளில் 63 வழக்குகளும், 8 வழிப்பறி வழக்குகளில் 6 வழக்குகளும், 11 நகைப் பறிப்பு வழக்குகளில் 5 வழக்குகளும், 16 பகல் கொள்ளை வழக்குகளில் 6 வழக்குகளும், 46 இரவுக் கொள்ளை வழக்குகளில் 22 வழக்குகளும் கண்டறியப்பட்டுள்ளன.
188 குற்ற வழக்குகளில் ரூ. 1 கோடியே 64 லட்சத்து 5 ஆயிரத்து 690 இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ரூ. 90 லட்சத்து 92 ஆயிரத்து 525 மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளது.