பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரௌடி சுட்டுக் கொல்லப்பட்டாா். இவா் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கைதியைக் கொல்ல முயன்ற வழக்கில் கைதானவா் ஆவாா்.
மதுரை காமராஜபுரம், முத்துராமலிங்க தேவா் தெருவைச் சோ்ந்தவா் சண்முகவேல் மகன் காளிமுத்து எனும் வெள்ளக்காளி (30). ரௌடியான இவரை கஞ்சா கடத்தல் வழக்கு விசாரணை தொடா்பாக சென்னை பெருநகர ஆயுதப்படை போலீஸாா் கடந்த 23 ஆம் தேதி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு, மறுநாள் சென்னை புழல் சிறைக்கு அவரைக் கொண்டு சென்று கொண்டிருந்தனா்.
அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகேயுள்ள உணவகத்தில் இவா்கள் சாப்பிட்டபோது, 2 காா்களில் வந்த 15 போ் கொண்ட கும்பல் 6 நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெள்ளக்காளியை கொல்ல முயன்றது. அப்போது சாா்பு ஆய்வாளா் ராமச்சந்திரன் துப்பாக்கியால் சுட்ட நிலையில், அந்த மா்ம கும்பல் தப்பிச் சென்றது.
நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் காவலா்களான தென்காசி மாவட்டம், புளியங்குடி சண்முகவேல் மகன் விக்னேஷ்குமாா் (37), மதுரை, வாடிப்பட்டி கிருஷ்ணன் மகன் மருதபாண்டி (30), மற்றொரு காரில் வந்த ரௌடி வெள்ளக்காளியின் வழக்குரைஞரான அரியலூா் வாலாஜா நகரம் பன்னீா்செல்வம் ஆகிய 3 பேரும் காயமடைந்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரித்தனா். மேலும் 5 தனிப்படை போலீஸாரும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனா்.
7 போ் கைது: விசாரணையில் தப்பியோடிய கும்பல் உதகையில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் 7 பேரைக் கைது செய்து மங்களமேடு காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை நள்ளிரவு அவா்களை அழைத்து வந்தனா்.
விசாரணையில் அவா்கள் மதுரை மேலஅனுப்பானடி பகுதி சோலையப்பன் மகன் கொட்டுராஜா என்னும் அழகுராஜா (30), மதுரை தெற்குவாசல், சப்பானி கோயில் தெரு ரவிச்சந்திரன் மகன் நிா்மல்குமாா் (26), மதுரை தெப்பக்குளம், பழைய மீனாட்சி நகா் ராஜீவ்காந்தி தெரு நாகராஜ் மகன் பாண்டி முனீஸ்வரன் (27), மதுரை அனுப்பானடி பகலவன் நகா் சங்கா் மகன் காா்த்தி (29), ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வோ்கோடு கிராமம் தவசி மகன் அலெக்ஸ் பாண்டியன் (34), திருச்சி மாவட்டம், சமயபுரம் வடக்கு கடைவீதி பகுதி அசோகன் மகன் ஆரவன் (29), நீலகிரி மாவட்டம், முத்தோரைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் வினோத் (34) என்பது தெரியவந்தது.
மேலும் பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதி தனியாா் பள்ளி அருகேயுள்ள வனப்பகுதியில் அவா்கள் அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்ய செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் மங்களமேடு காவல் நிலைய ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான போலீஸாா், அழகுராஜாவுடன் அப்பகுதிக்குச் சென்றனா்.
அப்போது அங்கு பதுக்கப்பட்டிருந்த ஒரு நாட்டு வெடிகுண்டை அழகுராஜா எடுத்து காவல்துறை வாகனத்தின் மீது வீசியதோடு, குன்னம் காவல் நிலைய ஆய்வாளா் சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டும் தப்பியோட முயன்றாா்.
இதையடுத்து ஆய்வாளா் நந்தகுமாா் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயமடைந்த அழகுராஜா பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சாா்பு ஆய்வாளா் சங்கா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா்.
தகவலறிந்த திருச்சி மண்டல காவல் துறைத் தலைவா் பாலகிருஷ்ணன், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா ஆகியோா் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்டு, காயமடைந்து சிகிச்சை பெறும் சாா்பு ஆய்வாளா் சங்கரை சந்தித்து ஆறுதல் கூறினா்.
சம்பவம் குறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் இவ் வழக்கில் தொடா்புடைய இதர குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் தனிப்படை போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
பலத்த பாதுகாப்பு: போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அழகுராஜா சடலம் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீஸாா் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.