கலைத் திருவிழா போட்டிகளில் வென்றோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்
பெரம்பலூர்கலைத் திருவிழா போட்டிகளில் வென்றோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வியாழக்கிழமை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ், 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள், பள்ளி, குறுவள மையம், ஒன்றியம் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில் பங்கேற்ற பீல்வாடி அரசு உயா்நிலைப்பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி சே. ரதிமீனா நாட்டுப்புற நடன போட்டியில் மாநில அளவில் முதலிடமும், அரசு உதவி பெறும் பெரம்பலூா் மேல்நிலைப்பள்ளி மாணவன் ந. மனோகரன் பறை-இசை போட்டியில் மூன்றாமிடமும், கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்கள் நாட்டுப்புற நடன குழுப் போட்டியில் மூன்றாமிடமும், முஹம்மது பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜ. ரஸ்மிதா ஹனீன் ஆங்கில பேச்சுப் போட்டியில் மூன்றாமிடமும் என, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனா்.
இப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மிருணாளினி வியாழக்கிழமை சான்றிதழ்கள் அளித்து வாழ்த்து தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், முதன்மைக்கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் பொ. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் குமாா் (கல்வித்துறை), மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.