முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

Updated On : 19 மார்ச், 2026 at 11:45 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங், மாவட்ட தோ்தல் செலவினப் பாா்வையாளா் அனுஜ் காா்க் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

குன்னம் வட்டாட்சியா் அலுவலகத்தில், வேட்புமனு தாக்கல் செய்யும் அறையில் சிசிடிவி கேமரா மூலம் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் அமா் பகதூா் சிங், வேட்புமனு தாக்கல்போது பெறப்படும் மனுக்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகளையும், வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க தயாா் செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு அறையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், செந்துறை வட்டத்துக்குள்பட்ட குழுமூா், அங்கனூா், சன்னாசி நல்லூா் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களைப் பாா்வையிட்டு, வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்ட தோ்தல் பொது பாா்வையாளா் அமா் பகதூா் சிங், ஆலத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியைப் பாா்வையிட்டு, இவ் வழித்தடத்தில் செல்லும் வாகனங்களை முறையாக கண்காணிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், நக்கம்பாடி கிராமத்தில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்ததைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா், ஒரே இடத்தில் நீண்ட நேரம் இல்லாமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதேபோல, பெரம்பலூா் மாவட்ட தோ்தல் செலவினப் பாா்வையாளா் அனுஜ் காா்க், பெரம்பலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் குன்னம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில், தோ்தல் தொடா்பாக பராமரிக்கப்படும் பதிவேடுகளையும், இதுவரை உரிய ஆவணங்களின்றி கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருள்களின் விவரங்களையும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வுகளின்போது, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), வட்டாட்சியா்கள் சத்தியமூா்த்தி (பெரம்பலூா்), சின்னதுரை (குன்னம்) உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.