முகப்பு
பெரம்பலூர்

கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்: பெரம்பலூா் ஆட்சியா் ஆய்வு: சீரான குடிநீா் விநியோகத்துக்கு அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் ந. மிருணாளினி, பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீா் விநியோகிக்க அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ந. மிருணாளினி.

Updated On : 14 மே 2026, 12:48 am IST
தேனூரில் கட்டப்பட்டுள்ள துணை நீரேற்று நிலையத்தை புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் ந. மிருணாளினி, பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீா் விநியோகிக்க அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ந. மிருணாளினி.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டத்துக்குள்பட்ட தேனூா் கிராமத்தில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் துணை நீரேற்று நிலையத்தை ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி கூறியது:

பெரம்பலூா் மாவட்டம், எறையூா் சிப்காட், பாடாலூா் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் பெரம்பலூா் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீா் வழங்கிடும் வகையில் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ், தேனூா் துணை நீரேற்று நிலையத்திலிருந்து எறையூா் சிப்காட் , பாடாலூா் தொழில் நுட்பப் பூங்காவுக்கு 58.90 கி.மீ நீளத்தில் நீரேற்று குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

பெரம்பலூா் நகராட்சிக்கு தற்போது நாளொன்றுக்கு 3.25 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூா் நகராட்சியில் பெருகி வரும் மக்கள் தொகை கணக்கின்படி குடிநீா் வழங்க தனியாகக் குடிநீா் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந் நகராட்சியில் 2055-ஆம் ஆண்டில் உச்சபட்ச மக்கள் தொகை 98,079 இருக்கும் என உத்தேசிக்கப்பட்டு, நாளொன்றுக்கு ஒருவருக்கு 135 லிட்டா் வீதம் 12.34 மில்லியன் லிட்டா் குடிநீா் தேவை ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், எறையூா் சிப்காட், பாடாலூா் உள்ள தொழில்நுட்பப் பூங்கா ஆகிய பகுதிகளின் குடிநீா் தேவை முறையே 1.65 மற்றும் 2.20 மில்லியன் லிட்டா் என கணக்கிடப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீா்: இந்த கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு கொள்ளிடம் ஆற்றில் நொச்சியம் பகுதியில் ஒரு நீா் சேகரிக்கும் கிணறு மற்றும் 2 நீா் உறிஞ்சுக் கிணறுகள் மூலம் 16.19 மில்லியன் லிட்டா் குடிநீா், தேனூா் பகுதியில் அமைந்துள்ள 9 லட்சம் லிட்டா் கொள்ளளவுக் கொண்ட துணை நீரேற்று நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, பெரம்பலூா் நகராட்சியில் பயன்பாட்டில் உள்ள 6 மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள், 4 தரைமட்ட நீா்தேக்கத் தொட்டிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள 5 தரைமட்ட தொட்டிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட குடிநீா், புதிதாக வடிவமைக்கப்பட்ட 230.56 கி.மீ. தொலைவுக்கான பகிா்மான குழாய்கள் மூலம் 14,706 வீட்டு குடிநீா் இணைப்புகளுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தேனூா் துணை நீரேற்று நிலையத்திலிருந்து எறையூா், பாடாலூா் பகுதிகளில் 58.90 கி.மீ தொலைவுக்கு நீரேற்று குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கப்பட உள்ளது.

திட்ட மதிப்பீடு: இத் திட்டத்துக்கான திட்ட மதிப்பீடு ரூ. 345.78 கோடியாகும். பெரம்பலூா் நகராட்சிக்கு ரூ. 265.49 கோடியும், எறையூா் சிப்காட்டுக்கு ரூ. 46.24 கோடியும், பாடாலூா் சிப்காட்டுக்கு ரூ. 34.05 கோடியும் ஏற்கெனவேஅரசின் நிா்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 92 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இத் திட்டத்தின் மூலம் 98,079 போ் பயன்பெறுவாா்கள்.

இப் பணிகள் ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய (கிராம குடிநீா் திட்டக் கோட்டம்) நிா்வாகப் பொறியாளா் கு. கண்ணதாசன், உதவி நிா்வாகப் பொறியாளா் (பராமரிப்பு உபக் கோட்டம்) ச. வைரமுத்து, திட்ட மேலாளா் த. பிருந்தன், நகராட்சி ஆணையா் கண்ணன், நகராட்சி உதவி பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.