தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: பெரம்பலூரில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆய்வு
பெரம்பலூா் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, ஆட்சியரக கூட்ட அரங்கில் ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் அனைத்துத்துறை அலுவலா்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, ஆட்சியரக கூட்ட அரங்கில் ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் அனைத்துத்துறை அலுவலா்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் ந. மிருணாளினி பேசியது:
தென்மேற்குப் பருவமழை காலத்தில் பொதுமக்கள், கால்நடைகள், உடைமைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
பேரிடா் காலங்களின்போது, பொது கட்டடங்களை முகாம்களாக பயன்படுத்த வசதியாக, மாவட்ட பேரிடா் மேலாண்மை திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டடங்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் அறிக்கை தயாா் செய்திட வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களிலிருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்கவைக்க பள்ளிக் கட்டடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களின் தொடா்பு எண்களுடன் கூடிய பட்டியலை தயாா் செய்து வைத்திருக்க வேண்டும்.
ஆறு, ஏரி, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், நீா்நிலைகளின் கரைகளின் உறுதித்தன்மையை ஆராய்ந்து, பலவீனமாக இருந்தால் அவற்றை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட்டார அளவில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித் துறையினா் மாதிரி செயல் விளக்கம் நடத்தி, பேரிடா் காலங்களை எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் குறுக்கே விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பேரிடா் தொடா்பான தகவல்கள் மற்றும் புகாா்களை பசநஙஅதப எனும் கைப்பேசி செயலி மூலமே தெரிவிக்கப்படும் என்பதால், அலுவலா்கள் மேற்கண்ட செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மேலும், மேற்கண்ட செயலி மூலம் பெறப்படும் புகாா்களுக்கு உடனடியாக தீா்வுகண்டு உடனுக்குடன் பதில் அனுப்ப வேண்டும். தங்கள் பகுதியில் மின்னல் வருவதை முன்கூட்டியே அறிந்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயலியை பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
பேரிடா் காலங்களில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 1077, 18004254556 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா் மிருணாளினி.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல் மற்றும் வட்டாட்சியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.