புதுக்கோட்டை

புயல் நிவாரணம், மின்சாரம் வழங்கக்கோரி சாலை மறியல்

DIN


கஜா புயலால் பா திக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம், உடனடி மின்சாரம் வழங்க வலியுறுத்தி ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட வட்டங்களில் வீடுகள், மரங்கள், பயிர்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.
சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவந்தாலும், இன்னும் பல கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், புயலால் பாதிக்கப்பட்டு ஒரு மாதமாகியும் இன்னும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
இந்நிலையில், இப்பகுதியில் மின்சீரமைப்பு பணிகளுக்காக வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான மின் ஊழியர்கள் அழைத்துவரப்பட்டு சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்னும் பல கிராமங்கள், மின் மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஆனால், வரவழைக்கப்பட்ட மின் ஊழியர்கள் அனைவரும் இங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில், அணவயல், மாங்காடு, வடகாடு, கீரமங்கலம், புள்ளான்விடுதி, சேந்தன்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் மடியேந்தி பிச்சை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 99 சதவிகிதத்திற்கும் அதிகமாக அனைத்து இடங்களிலும் மின் இணைப்பு வழங்கப்பட்டதாக மின்வாரியத்தினர் அளித்த தவறான தகவலைத் தெரிவித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கரைக் கண்டித்தும், பணிகள் முடிவடையாமல் மின் ஊழியர்களை அனுப்பி வைத்த மின் வாரியத்தைக் கண்டித்தும், உரிய நிவாரணத்தை உடனே வழங்க வலியுறுத்தியும் சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் டி.புஷ்பராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலர் மு.மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். தொடர்ந்து, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார், மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தியாகராஜ மூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், மீண்டும் 1000 மின்பணியாளர்களை அழைத்துவந்து இம்மாத இறுதிக்குள் வீடு, விவசாய மோட்டார்கள் முழுவதுக்கும் மின்இணைப்பு வழங்கப்படும் என்ற உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். இதனால், புதுக்கோட்டை-பட்டுக்கோட் டை, பேராவூரணி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட வழித்தடங்களில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அறந்தாங்கியில்... அறந்தாங்கியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்கக் கோரி சனிக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
அறந்தாங்கி வட்டம், மாத்தூர் ராமசாமிபுரம் ஊராட்சி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்க வேண்டும். முழுமையாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி அறந்தாங்கி வாரச்சந்தையிலிருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
வட்டாட்சியர் வேறு பணிக்கு சென்றுவிட்ட காரணத்தால் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் கைக்குழந்தையுடன் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் ஆ.ராஜேந்திரன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச்செயலாளர் கே.ராஜேந்திரன், கிளை செயலாளர்கள் ரெத்தினம், பெருமாள், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் வருவாய்த் துறை சார்பில் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.
விராலிமலையில்... விராலிமலை சுற்று வட்டார கிராமங்களில் அரசின் நிவாரணப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் தயாரிப்பில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், நிவாரணப் பொருள்கள் பெற அளிக்கப்படும் டோக்கனுக்கு ரூ. 150/- கேட்கப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாளிப்பட்டி, பாட்னாப்பட்டி, குட்டியப்பட்டி, காரடைக்கம்பட்டி, அருவாங்குளம்பட்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ராஜாளிப்பாட்டி கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மணப்பாறை - விராலிமலை சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து நிகழ்விடம் வந்த விராலிமலை போலீஸாருக்கும் பொதுமக்களுக்கு இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரப் போராட்டம் நடைபெற்றும் எந்தவித சமரசமும் ஏற்படாததால் காவல் ஆய்வாளர் அ. மா.செந்தில்மாறன் தலைமையிலான போலீஸார் பொதுமக்களைக் கலைத்து போக்குவரத்தை சீராக்கினர்.
கந்தர்வக்கோட்டையில்... கந்தர்வகோட்டை அருகே உள்ள வளவம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் அனைவருக்கும் புயல் நிவாரணம் வழங்கக்கோரி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்கள் சில பேர் பட்டியலில் விடுபட்டதால் அவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால், ஆத்திரமடைந்த வளவம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் வளவம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தஞ்சை -புதுகை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கந்தர்வகோட்டை வட்டாட்சியர் இ. ஆரமுததேவசேனா பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவில் சாய்னா!

நாளொரு வண்ணம்..!

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

விரைவில் சூர்யா - 44 பெயர் டீசர்!

இந்தியா-வங்கதேச எல்லையில் ரூ.12 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்

SCROLL FOR NEXT