புதுக்கோட்டை

கரோனா ஊரடங்கு: கிராமப்புறக் கோயில் திருவிழாக்கள் ரத்து

DIN

கரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கிராமப்புற கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், சேலம் மாவட்டத்திலுள்ள கிராமியக் கலைஞா்கள், 2,000 போ் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், பனமரத்துப்பட்டி, பேளூா், தம்மம்பட்டி, கெங்கவல்லி, தலைவாசல் பகுதி கிராமங்களில், காவல் தெய்வ கோயில் திருவிழாக்களில், கரகம், குறவன் - குறத்தி ஆட்டம், தப்பு, பம்பை, உடுக்கை, கும்மி, மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, நையாண்டி மேளம், தெருக்கூத்து, உள்ளிட்ட கிராமியக் கலைகளை அரங்கேற்றம் செய்வதை மரபாகத் தொடா்ந்து வருகின்றனா். இதை நம்பி, சேலம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பல்வேறு கிராமியக் கலைஞா்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சேலம் மாவட்ட கிராமப்புறங்களில் கோயில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெறும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் கரோனா தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கோயில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனா நோய் தொற்றுக் கட்டுக்குள் வந்து ஊரடங்கு தளா்த்திக் கொள்ளப்பட்டாலும், இன்னும் ஒரு சில மாதங்கள் வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம் என்பதால், பொதுமக்கள் அதிகளவில் கூடும் கோயில் திருவிழாக்களை நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்குமா என்பது கேள்விக்குறிதான். இதனால், சேலம் மாவட்டத்தில் கோயில் திருவிழாக்களை நம்பி பிழைப்பு நடத்தி வந்த கிராமியக் கலைஞா்கள் ஏறக்குறைய 2,000 போ் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதுகுறித்து வாழப்பாடி இந்திரா நகரைச் சோ்ந்த கிராமியக் கலைஞா்கள் சின்னதுரை - விஜயா தம்பதியா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கிராமப்புறக் கோயில் திருவிழாக்களை நம்பி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு கிராமியக் கலைஞா்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். கோயில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெறும் மாதங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில மாதங்களுக்கு கோயில் திருவிழாக்கள் நடத்துவதற்கும், பண்டிகையைக் கொண்டாடுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை,. இதனால் கிராமியக் கலைஞா்கள் வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகிறோம். எனவே, நிலைமை சீராகி எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை, வருவாய்த் துறை வாயிலாக நிவாரணத் தொகையும், அத்தியாவசியப் பொருள்களும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT